

நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அணைப் பட்டி மெயின் ரோட்டில் வாரம் தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இது தவிர தினசரி சந்தையும் நடைபெறுகிறது. இந்த சந்தையில் கடந்த வாரம் பேரூராட்சி சார்பில் ஏலம் நடைபெற்றது. வாரச்சந்தைக்கு வரிகள் உட்பட ரூ.56 லட்சம், நிர்ணயிக்கப்பட்டு ஏலம் முடிவானது. அதன் பிறகு வாரச்சந்தையில் கடை வியாபாரிகளுக்கும், காய்கறி பெட்டிகளுக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
ஒர தக்காளி பெட்டி ரூ.5 என வாடகை வாங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு மூட்டை ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ.70 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை அதிகரிப்பால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டும் எவ்வித பதிலும் அளிக்காததால் இன்று கடைகள் வைக்காமல் புறக்கணித்தனர். மேலும் நிலக்கோட்டை கோர்ட்டு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் இல்லாததால் சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், நிலக்கோட்டை சந்தையில் சுமார் 500 கடைகள் உள்ளன. பல்வேறு இன்னல்களுக்கு இடையே இங்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
பல சமயங்களில் உரிய விலை கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நிலையில் காய்கறி மூட்டைக்கும் கடை வாடகைக்கும் உயர்த்தப்பட்டுள்ள இந்த விலை உயர்வு வியாபாரிகளால் ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே இதனை அதிகாரிகள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.