திருச்சி சிறையில் இருந்து தப்பிய நைஜீரிய கைதி டெல்லியில் கைது

திருச்சி மத்திய சிறையில் இருந்து தப்பிய நைஜீரிய கைதியை டெல்லியில் வைத்து திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நைஜீரிய கைதி ஸ்டீபன் பால்.
நைஜீரிய கைதி ஸ்டீபன் பால்.
Published on

திருச்சி:

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் 41 இலங்கை தமிழர்கள், நைஜீரியாவை சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 48 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் நைஜீரியாவை சேர்ந்த ஸ்டீபன் பால் அப்புச்சி (வயது 31) என்பவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் திருச்சி முகாம் சிறைக்கு மாற்றப்பட்டார். இவரைப்போல மற்ற 3 நைஜீரியர்களும் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதானவர்கள்.

நைஜீரிய நாட்டு தூதரகத்தின் மூலம் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்ட பின் இவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட இருந்தனர். இந்தநிலையில் கடந்த ஜூலை 19-ந்தேதி அதிகாலை ஸ்டீபன் பால் சிறை சுவற்றின் அருகே இருந்த 25 அடி உயர பெரிய மரத்தில் ஏறி தப்பி சென்று விட்டார். இது குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

ஸ்டீபனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை திருப்பூர், பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களுக்கு சென்று விசாரணை நடத்தியது. கியூ பிரிவு போலீசாரும் ஸ்டீபன் பாலை தேடி வந்தனர். தப்பி ஓடிய அவருக்கு பாஸ்போர்ட் கிடையாது. 3 நகரங்களில் நடத்திய விசாரணையில்சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது எஸ்.ஐ.யை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராம் என்பவனுடன் நெருங்கி பழகியதால் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த மாதம் அங்கு சென்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு ஸ்டீபன் பாலை பிடிக்க முடியாமல் திணறிய தனிப்படை தமிழகம் திரும்பியது.

இந்தநிலையில் ஸ்டீபன் பால் மீண்டும் போலி பாஸ்போர்ட் எடுப்பதற்காக மும்பை வந்திருப்பதை அறிந்த திருச்சி தனிப்படை போலீசார் உடனடியாக மும்பை சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஸ்டீபன் பாலுடன் தங்கியிருந்த நண்பர் ஒருவர், அந்த மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டதால், அந்த அறையை காலி செய்து விட்டு டெல்லிக்கு தப்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஒரு வாரமாக புதுடெல்லியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று ஸ்டீபன்பாலை டெல்லியில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை போலீசார் திருச்சிக்கு அழைத்து வருகின்றனர். சினிமா பாணியில் தப்பி 57 நாட்களாக போலீசாருக்கு தண்ணி காட்டிய நைஜீரிய கைதியை கைது செய்த திருச்சி தனிப்படை போலீசாரை , மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com