தவான் அதிரடியால் இலங்கைக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா

கொழும்பில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் தவான் அதிரடியால் இலங்கைக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #NidahasTrophy
தவான் அதிரடியால் இலங்கைக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா
Published on

டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் சமீரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 1 ரன் எடுத்த நிலையில் நுவான் பிரதீப் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. மணிஷ் பாண்டே நிதானமாக விளையாட தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 30 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 12 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

இந்தியாவின் ஸ்கோர் 12.4 ஓவரில் 104 ரன்னாக இருக்கும்போது மணிஷ் பாண்டே 37 ரன்களில் (35 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்ஸ்) ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டேவை அடுத்து ரிஷப் பந்த் களம் இறங்கினார். அரைசதம் அடித்த தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ரிஷப் பந்தால் அதிரடியாக விளையாட முடியவில்லை.

18-வது ஓவரின் கடைசி பந்தில் தவான் 90 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் 49 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சர்களுடன் இந்த ரன்னை எடுத்தார். 5-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் இரண்டு பவுண்டரியும், ரிஷப் பந்த் ஒரு பவுண்டரியும் அடித்து, கடைசி பந்தில் ஆட்டமிழக்க இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு  174 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 6 பந்தில் 13 ரன்கள் சேர்த்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com