

புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக கடந்த 2011-ல் தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஹிஸ்புல் முஜாகிதின் தலைவர் சையத் சலாவுதின் மகன் சையத் சாகித் யூசுப்பை சில தினங்களுக்கு முன் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பட்காம் மாவட்டத்தில் உள்ள சோய்பக் கிராமத்தில் உள்ள யூசுப் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி 5 மொபைல் போன்கள், இரண்டு ஹார்ட் டிஸ்க், லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதின் தலைவர் சையத் சலாவுதினின் பேரன் முசாமில் கானுக்கு தேசிய புலனாய்வு முகமை இன்று சம்மன் அனுப்பியது. அதில், தெசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் அக்டோபர் 28-ம் தேதி (நாளை) ஆஜராக வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.