

புதுடெல்லி:
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைகள் தொடர்ந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு மாதத்தில் மட்டும் 52 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் இறந்திருப்பதாக மருத்துவமனை சூப்பிரெண்டு கூறியதாக தகவல்கள் வெளியாகின.
ஊடக தகவல்களை அடிப்படையாக வைத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த பிரச்சினையை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. முதற்கட்டமாக, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள அந்த நோட்டீசில், குழந்தைகள் உயிரிழப்பு குறித்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறப்பட்டுள்ளது.
இதேபோல் சமீபத்தில் கோரக்பூர் மற்றும் ராய்ப்பூர் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளை குறைந்ததால் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சமீபத்தில் விசாரணையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.