

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மவுரானிபூர் அருகே நேற்று பள்ளி பேருந்து - லாரி விபத்தில் பேருந்தின் உதவியாளர் கான்ஷ்யாமின் கால் துண்டானது. இதனை அடுத்து, அவர் ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை கட்டிலில் படுக்கவைக்கப்பட்ட போது, துண்டிக்கப்பட்ட காலை அவருக்கு தலையணையாக மருத்துவமனை ஊழியர்கள் வைத்துள்ளனர். இதனை அடுத்து, காஷ்யாமின் குடும்பத்தினர் தலையணை ஒன்று வாங்கி வந்தனர். ஆனால், அதனை வெட்டுப்பட்ட காலின் கீழ் ஊழியர்கள் வைத்துள்ளனர்.
இதுதொடர்பான செய்திகள் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்செய்தி வெளிஉலகிற்கு தெரியவந்ததும் மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் சாத்னா கவுசிக், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதில் முதல்கட்ட நடவடிக்கையாக மருத்துவமனையின் இரு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான தகவல் கிடைக்கப்பெற்றதும் மாநில அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என அம்மாநில துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா கூறிஉள்ளார்.
பத்திரிகை செய்தி அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) இதை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.