அடுத்த மாதம் முதல் இலவச டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வினியோகம்: அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஏற்பாடு

70 லட்சம் கேபிள் டி.வி. வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் இலவசமாக டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வினியோகிக்க தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.
அடுத்த மாதம் முதல் இலவச டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வினியோகம்: அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஏற்பாடு
Published on

சென்னை:

குறைந்த விலையில் சிறந்த கேபிள் டி.வி. சேவையை வழங்கும் வகையில், 2007-ம் ஆண்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலேயே செயலிழந்த நிலைக்கு சென்ற இந்த நிறுவனத்திற்கு 2011-ம் ஆண்டு புத்துயிரூட்டப்பட்டது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் என்று பெயரும் மாற்றப்பட்டது. ரூ.70 கட்டணத்தில் 120 சேனல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

குறைந்த கட்டணம் என்பதால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. தற்போதைய நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் 70 லட்சம் பேர் வாடிக்கையாளராக உள்ளனர். 26 ஆயிரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், டிஜிட்டல் தரத்தில் சேனல்களை வழங்க முடிவு செய்து, அதற்கான அனுமதியை மத்திய அரசின் ‘டிராய்’ நிறுவனத்திடம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கோரி இருந்தது. பல்வேறு போராட்டத்திற்கு பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வாங்குவதில் கவனம் செலுத்தப்பட்டது. முதற்கட்டமாக, கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் இருந்து டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் ஆர்டர் பெறப்பட்டது. இதுவரை, 70 லட்சம் செட்டாப் பாக்ஸ்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை செய்து தருவதற்காக, டெண்டர் விடப்பட்டது. மொத்தம் 7 நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்றிருந்தன. அதில், 3 நிறுவனங்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தற்போதைய நிலையில், 4 நிறுவனங்கள் களத்தில் உள்ளன. இந்த நிலையில், நேற்று டெண்டர் திறக்கப்பட்டது. இதில், குறைந்த விலைக்கு டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் செய்து தருவதாக உறுதியளிப்பவருக்கு பணி வழங்கப்பட இருக்கிறது.

ஒரே நிறுவனத்தால் 70 லட்சம் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்கள் செய்து தருவது கடினம் என்பதால், டெண்டரில் பங்கேற்ற ஏனைய 3 நிறுவனங்களும் முதல் நிறுவனம் குறிப்பிட்ட குறைந்த தொகைக்கு ஒத்துவந்தால் அவர்களுக்கும் இந்த பணி பிரித்து வழங்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் இந்த பணிகள் வழங்கப்பட இருக்கின்றன.

70 லட்சம் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் செய்ய ரூ.1,200 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களுக்கு இந்த டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை இலவசமாகவே வழங்க தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் டெண்டர் எடுக்கும் நிறுவனம் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை தயாரித்து வழங்கத் தொடங்கும். அந்த பாக்ஸ்களை முன்பதிவு செய்துள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பிரித்து வழங்கப்படும். வரும் டிசம்பர் மாதத்திற்குள் 70 லட்சம் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களையும் பெற்று வாடிக்கையாளர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தற்போது, வாடிக்கையாளர்களிடம் ரூ.70 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில், தனியாரை விட குறைந்த அளவாக கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது. அதாவது, ரூ.100 முதல் ரூ.150-க்குள் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

வாடிக்கையாளர்களிடம் மாதந்தோறும் வசூலிக்கப்படும் வாடகைத் தொகையை தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனம் பெற்று, 36 மாதங்களாக (அதாவது 3 ஆண்டுகள்) டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் தயாரித்து கொடுத்த நிறுவனத்திற்கு அதற்கான தொகையை செலுத்தும்.

இந்த டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் குறித்து, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஏற்கனவே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் சென்னை, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் 50 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது, ‘எம்பெக் 2’ வகையை சேர்ந்தது. ஆனால், தற்போது வழங்கப்பட உள்ள 70 லட்சம் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களும் ‘எம்பெக் 4’ வகையை சேர்ந்தது. இதனால், அதிநவீன தொழில்நுட்பத்தில் படத்தை தெளிவாக காண முடியும். ‘எம்பெக் 2’ வகை செட்டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்களிடம் அதை திரும்ப பெற்று, ‘எம்பெக் 4’ வகை செட்டாப் பாக்ஸ்களாக மாற்றிக்கொடுக்கப்படும்.

இந்த 70 லட்சம் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களில் 10 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் எச்.டி. (துல்லியமான காட்சி) தரத்தில் வாங்கப்பட இருக்கிறது. இதையும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட உள்ளது. ஆனால், இதற்கான கட்டணம் சற்று அதிகமாக இருக்கும் எனவே, விருப்பத்தின் பேரில் அது வழங்கப்படும். மொத்தம் 220 சேனல்கள் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் மூலம் வழங்கப்படும். இதனால், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள் என்று நம்புகிறோம்.

வருங்காலங்களில், டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்கள் மாதக்கட்டணத்தை செலுத்த செல்போன் செயலியும் தனியாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. எனவே, வீட்டில் இருந்தபடியே உரிய கட்டணத்தை செலுத்த முடியும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com