

நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது டி-20 போட்டி பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
மார்ட்டின் கப்தில், கொலின் முன்ரோ ஜோடி தொட்டக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அந்த அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. 11.3 ஓவரில் 136 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கப்தில் அவுட்டானார். அவர் 38 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 63 ரன்கள் எடுத்தார்.
அவரை தொடர்ந்து முன்றோ தனது அதிரடியை தொடர்ந்தார். அவர் 53 பந்துகளில் 10 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 104 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் ஓரளவு விளையாட நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் பிராத்வைட் 2 விக்கெட்டுகளும், டெய்லரும், எமிட்டும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் பிளெட்சரை தவிர மற்ற யாரும் நிலைத்து விளையாடவில்லை.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அவுட்டாகினர். இதனால் அந்த அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டும், போல்ட், சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கிச்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 119 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.