

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் ஆக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று ஆட்டங்களில் முறையே இந்திய அணி 1-4, 2-8, 2-3 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஆட்டம் ஹாமில்டனில் நேற்று நடந்தது.
இதில் தொடக்கத்தில் இந்திய அணி தாக்குதல் பாணியை கையாண்டு கோல் போட பலவாறு முயற்சித்தது. ஆனால் நியூசிலாந்தின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. அதன் பிறகு ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து வீராங்கனைகள் 14, 17, 26-வது நிமிடங்களில் கோல் போட்டு முதல் பாதியில் தங்கள் அணிக்கு வலுவான முன்னிலையை உருவாக்கினர்.
பிற்பகுதியில் இந்திய கோல் கீப்பர் ரஜனி எட்டிமர்பு சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்தின் கோல் முயற்சிகளை முறியடித்தார். இல்லாவிட்டால் இந்திய அணியின் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். முடிவில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது.