புத்தாண்டையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

புத்தாண்டையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் அலைமோதியது. அவர்கள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்த காட்சி.
சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்த காட்சி.
Published on

பென்னாகரம்:

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் புத்தாண்டையொட்டி நேற்று 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு காவிரி ஆற்றில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மெயின் அருவி, ஐந்தருவி வழியாக மணல் திட்டு வரை காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.

பின்னர் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். புத்தாண்டையொட்டி ஒகேனக்கல் பஸ் நிலையம், நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்ததால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், ஊர்க்காவல் படையினர் ஊட்டமலை, ஆலாம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல்துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com