புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விபத்துகள் ஏற்படாமல் தடுக்க கோவையில் 4 மேம்பாலங்கள் மூடல்

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விபத்துகள் ஏற்படாமல் தடுக்க போலீஸ் கமி‌ஷனர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கோவை:

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அவினாசி ரோடு, ரேஸ்கோர்ஸ் ரோடு, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடுமற்றும் மாநகர பகுதிகளில் முக்கிய இடங்களில் 44 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்களிலும்,

26 நான்கு சக்கர வாகனங்களிலும், 400 மாநகர ஆயுதப்படை போலீசார், 80 சிறப்பு காவல்படை போலீசார், 150 ஊர் காவல்படையினர் உள்பட மொத்தம் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இவர்கள் பஸ் நிலையம், ரெயில் நிலையம், கடைவீதி, முக்கிய வழிபாட்டு தலங்களிலும் பணியில் ஈடுபட உள்ளனர். அவினாசி சாலையில் முக்கியமான சந்திப்புகளில் உதவி போலீஸ் கமி‌ஷனர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து விசாரிப்பதற்காக அவினாசி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் ரோடு பகுதிகளில் 25 வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ரேஸ்கோர்ஸ் ரோடு பகுதியில் மட்டும் குடிபோதையில் வருபவர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரிப்பதற்காக 3 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

குடிபோதையில் வருபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.அவினாசி ரோட்டில் அண்ணாசிலை சந்திப்பு, லட்சுமி மில் சந்திப்பு, வி.கே.ரோடு சந்திப்பு, சித்ரா சந்திப்பு ஆகிய 4 பகுதிகளில் மட்டுமே மைய தடுப்பு சுவர்கள் திறந்திருக்கும். விபத்துகளை தடுக்கும் வகையில் அவினாசி மேம்பாலம், நஞ்சப்பாரோடு மேம்பாலம், 100 அடி ரோடு மேம்பாலம், வடகோவை மேம்பாலம் ஆகியவை அடைக்கப்படுகிறது.

நகரின் 4 முக்கிய சாலை சந்திப்புகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் நிறுத்தப்படுகிறது. மேலும் புத்தாண்டு கொண்டாடத்தின் போது பெண்களை கேலி செய்தாலோ, குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. இதனையொட்டி கிறிஸ்தவ தேவாலங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கடைகளில் கேக் விற்பனை சூடுபித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com