

நாகர்கோவில்:
தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.100 அபராதம் விதித்து வந்தனர். இந்த நிலையில் இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுபோல போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என்றும் கூறப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
சட்ட திருத்தம் அமலுக்கு வந்த நிலையில் குமரி மேற்கு மாவட்டம் நித்திரவிளை சந்திப்பில் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சின்னத்துறையை சேர்ந்த வாலிபர் கிசான்ஜாண் (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர், ஹெல்மெட் அணியாமலும், மது போதையிலும் இருந்தார். அதோடு அவரது மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டும் விதிமுறைப்படி எழுதப்படவில்லை. இதையடுத்து வாலிபர் கிசான்ஜாண் மீது நித்திரவிளை போலீசார் புதிய வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர். இது குமரி மாவட்டத்தில் பதிவான முதல் வழக்கு ஆகும்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் குழித்துறை குற்றவியல் 2-வது கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ஜெய்சங்கர் விசாரித்தார்.
அவர், மோட்டார் வாகன புதிய சட்டத்திருத்த விதிப்படி ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000-மும், போதையில் வாகனம் ஓட்டியதற்கு ரூ.10 ஆயிரமும், விதிமுறைப்படி நம்பர் பிளேட் வைக்காததற்கு ரூ.500-மும் என மொத்தம் ரூ.11,500 அபராதம் விதித்தார்.
குமரி மாவட்டத்தில் புதிய வாகன சட்டப்படி வழக்கு பதிவாகி அபராதமும் விதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
நாகர்கோவில் சப்-டிவிசன் எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்த 92 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுபோல தக்கலை சப்-டிவிசன் பகுதியில் 166 பேர் மீதும், குளச்சல் சப்-டிவிசனில் 149 பேர் மீதும், கன்னியாகுமரி பகுதியில் 174 பேர் மீதும் என மொத்தம் 581 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய வாகன சட்டப்படி அபராத தொகை பல மடங்கு அதிகரித்திருப்பதால் ஹெல்மெட் அணிவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் வாகனம் ஓட்டுவோர் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிய தொடங்கி விட்டனர்.
கடந்த வாரங்களில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணியாமல் சிக்கினர். இப்போது அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. நாகர்கோவிலில் நேற்று ஹெல்மெட் அணியாமல் 92 பேர் மீது மட்டும் வழக்குப்பதிவாகி இருப்பதன் மூலம் இதனை தெரிந்து கொள்ளலாம்.