

தூத்துக்குடி வாகைக்குளம் பகுதியில் விமான நிலையம் இயங்கி வருகிறது. இதில் விமானப் போக்குவரத்து சேவை அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தொழில் நகரமான தூத்துக்குடிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஏர்பஸ் உள்ளிட்ட பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கான நிலம் மாவட்ட நிர்வாகம் மூலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. விரைவில் விரிவாக்கம் பணிகள் நடைபெற உள்ளன.
அதே நேரத்தில் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் முனையமும் இங்கு அமைக்கப்படுகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தனியார் நிறுவனம் சார்பில் தினமும் காலை, மாலை என இரு முறை விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
வரும் ஜூலை 26-ந்தேதி மற்றொரு தனியார் நிறுவனம் தூத்துக்குடி-சென்னை இடையே தினமும் புதிதாக 3 விமான சேவைகளை தொடங்குகிறது.