

உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் ரூ.1500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் ஆணையம் அனுமதி வழங்கியது. இத்திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் தேனி மாவட்டத்தில் நடந்து வருகிறது. மேலும் போராட்ட அழைப்புகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு நியூட்ரினோவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக நேற்று பேஸ் புக் மற்றும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது.
அம்பரப்பர் மலை மற்றும் தேனி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து மத்திய அரசின் உளவுத்துறையும், உள்ளூர் சி.ஐ.டி. போலீசாரும் கண்காணித்து அறிக்கை அனுப்பி வருகின்றனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் அம்பரப்பர் மலையைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மலைப்பகுதிக்குள் போராட்டக்காரர்கள் நுழையாத வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. நிர்மல் ஜோசி குமார் மற்றும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பொட்டிபுரத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் போடி ராசிங்காபுரத்தில் இருந்து வரக்கூடிய பாதைகள், டி.புதுக்கோட்டை, தேவாரம் பகுதிகளில் இருந்து வரக்கூடிய பாதைகள் குறித்தும் இப்பகுதியில் எத்தனை அடுக்கு பாதுகாப்பு வழங்கலாம் என்றும் ஆலோசனை நடத்திச் சென்றனர். மேலும் நிரந்தர செக்போஸ்ட் அமைத்து யாரும் உள்ளே வராத வகையில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. #NeutrinoProject