

கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கடலில் ஏராளமான மீனவர்கள் நாட்டுப் படகில் சென்று மீன்பிடித்து தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விசைப்படகு மீனவர்கள் சட்ட விரோதமாக கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவிற்குள் வந்து மீன், கடல் அட்டை போன்றவற்றை பிடித்து வந்தனர்.
இதனால் நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் தவித்து வந்தனர்.
நேற்று இரவு மண்டபத்தில் இருந்து 5 விசைப்படகுகளில் வந்த மீனவர்கள் சின்ன ஏர்வாடி கடலோரத்தில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடிக்க வந்துள்ளனர். அப்போது கடலில் வீசப்பட்டிருந்த நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் சேதமடைந்தது. தகவலறிந்த நாட்டுப்படகு மீனவர்கள் விசைப்படகுகளை மடக்கி பிடிக்கச் சென்ற போது அங்கிருந்த 5 விசைப்படகுகளில் 4 படகுகள் தப்பித்துச் சென்றன.
மண்டபம் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், படகில் இருந்த வேதாளையை சேர்ந்த குரைசி(வயது33), மண்டபத்தை சேர்ந்த கலந்தர் ஜகுபர் சாதிக்(வயது27)ஆகிய 2 மீனவர்களையும், சின்ன ஏர்வாடி மீனவர்கள் மடக்கி பிடித்து கடலோரத்திற்கு கொண்டு வந்தனர்.
விசைப்படகை சோதனையிட்ட போது 2பெட்டிகளில் 150 கிலோ கடல் அட்டை இருந்தது. இது குறித்து நாட்டுப்படகு சங்க செயலாளர் முத்துநாதன் மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் தேவிபட்டினம் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் பிடிபட்ட 2 மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கீழக்கரை வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். கடலில் குதித்து தப்பியோடிய விசைப்படகு டிரைவர் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.