நேபாளத்தின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பா நியமனம் -உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கே.பி.சர்மா ஒலி தோல்வியடைந்ததையடுத்து, அவர் தலைமையிலான அரசு மைனாரிட்டி அரசாக நீடிக்கிறது.
ஷெர் பகதூர் தேவ்பா
ஷெர் பகதூர் தேவ்பா
Published on

காத்மாண்டு:

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட்சி பூசலால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரக்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மே மாதம் பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தோல்வியடைந்து ஆட்சியையும் இழந்தார். பின்னர், எதிர்க்கட்சிகளால் ஆட்சியமைக்க முடியாத நிலையில், மீண்டும் கே.பி. சர்மா ஒலியையே பிரதமராக நியமித்தார் அதிபர். 

இந்த முறையும் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதிநிதிகள் சபையை கலைத்து, பிரதமர் தேர்தலுக்கான புதிய தேதிகளை அறிவித்தார். அதன்படி, வரும் நவம்பர் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும். 

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியேற்க முன்வந்த 61 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பா மற்றும் கே.பி. சர்மா ஒலி ஆகியோரின் கோரிக்கையை அதிபர் பித்யா தேவி ஏற்க மறுத்துவிட்டார். மைனாரிட்டி அரசாக கே.பி.சர்மா ஒலி அரசு நீடிக்கிறது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட எதிர்த்து நேபாள காங்கிரஸ் தலைமையிலான எதிர்கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது. 

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் நிலைநிறுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை 2 நாட்களில் நியமிக்கும்படி உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பினால் கே.பி.சர்மா ஒலிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கடந்த பிப்ரவரி மாதமும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com