இளைய சமுதாயத்தை பாதுகாக்க மதுக்கடையை மூட வேண்டும் - பலியான மாணவனின் சித்தப்பா பேட்டி

இளைய சமுதாயத்தை பாதுகாக்க அரசு மதுக்கடையை மூட வேண்டும் என்று பலியான மாணவன் தினேஷின் சித்தப்பா சங்கர குத்தாலம் கூறினார்.
இளைய சமுதாயத்தை பாதுகாக்க மதுக்கடையை மூட வேண்டும் - பலியான மாணவனின் சித்தப்பா பேட்டி
Published on

தற்கொலை செய்து கொண்ட மாணவன் தினேஷின் சித்தப்பா சங்கர குத்தாலம் என்ற மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தினேஷ் படிப்பில் சிறந்து விளங்கினான். சிறு வயதிலேயே அவனது தாய் இறந்து விட்டதால் தந்தை மீது மிகுந்த பாசம் வைத்திருந்தான். இந்நிலையில் தந்தை மாடசாமி அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் மாணவன் தினேஷ் பலமுறை இதுகுறித்து கேட்டுள்ளான். தனது தந்தை குடிப்பதை நிறுத்துமாறு கடந்த 5 வருடமாக முயற்சி செய்து வந்தான்.

மேலும் தனது தந்தையிடம் இனிமேலும் குடித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சில முறை மிரட்டியும் வந்துள்ளான். எனினும் மாடசாமி குடிப்பழக்கத்தை கைவிடவில்லை. இதனால் தினேஷ் மன உளைச்சலுடன் காணப்பட்டான். இனிமேலாவது அரசு வரும் காலங்களில் இளைஞர்களை பாதுகாக்க மதுக்கடைகளை மூட வேண்டும். குடிக்கிற அப்பாக்கள் மதுப்பழக்கத்தில் இருந்து வெளிவந்து திருந்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக தினேஷ் தனது தந்தையிடம் நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், இதன் பின்னராவது குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு கூறி வாக்குவாதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெருங்கிய நண்பர்களிடம் தற்கொலை முடிவு குறித்து பேசினாரா? என்பது தெரியவில்லை. இதையடுத்து தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது செல்போனை கல்லால் உடைத்து நொறுக்கி பிளாஸ்டிக் பையில் வைத்து தனது பேக்கில் வைத்துள்ளார்.

இதை கைப்பற்றிய போலீசார் அவர் பயன்படுத்திய சிம்கார்டு மற்றும் அவர் இறுதியாக பேசிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷின் தாய் இறந்து விட்டதால் தந்தை மாடசாமி கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com