நெல்லை டவுனில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

நெல்லை டவுனில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக தொழிலாளி உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை டவுனில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
Published on

நெல்லை:

நெல்லை பேட்டையில் உள்ள சர்தார் புரத்தை சேர்ந்தவர் குட்டி என்ற சுடலை (வயது30). ஆட்டோ டிரைவராக இருந்தார். நேற்று நள்ளிரவு சுடலை தனது ஆட்டோவை டவுன் ஆர்ச் அருகே நிறுத்தி விட்டு, சவாரிக்காக காத்து நின்றார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் சுடலையை சரமாரி வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே சுடலை ரத்த வெள்ளத்தில் பிணமானார். அப்போது நள்ளிரவு 11.30 மணி என்பதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. பஸ்சுக்காக காத்து நின்ற சிலரும் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

சம்பவ இடத்துக்கு நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாஸ்கரன், துணை கமி‌ஷனர் சாம்சன் உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் விமலன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சுடலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ‘திடுக்’ தகவல் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட சுடலையின் மனைவிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இங்கே தனியாக இருந்த சுடலை அந்த பகுதியை சேர்ந்த முருகன் மனைவி இசக்கியம்மாளுடன் சகஜமாக பேசி பழகி வந்தார். இதில் அவர்களுக்குள் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முருகன் தனது மனைவியையும், ஆட்டோ டிரைவர் சுடலையையும் எச்சரித்துள்ளார். அதையும் மீறி அவர்கள் மறைமுகமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், சுடலையை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மற்றொரு முருகன் என்பவரை உதவிக்கு அழைத்துக்கொண்டு டவுன் ஆட்டோ நிறுத்தம் இடத்துக்கு சென்றனர்.

அங்கு சுடலைக்காக காத்து நின்றனர். நள்ளிரவு சுடலை அங்கு வந்ததும் 2 பேரும் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். போலீசார் விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

இதைத்தொடர்ந்து 2 முருகன்களையும் பிடிக்க இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் விமலன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று தப்பி ஓடிய இரண்டு முருகன்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட சுடலையின் உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். குழந்தை பிறந்து சில நாட்களிலேயே சுடலை வெட்டிக்கொலை செய்யப்பட்டது அவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் கதறி துடித்தனர்.

இந்த சம்பவத்தை முன்னிட்டு பேட்டை சர்தார் புரத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com