அதிகாரிகளின் அலட்சியம்: ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டில் தவறுகளை திருத்த பொதுமக்கள் அலைகிறார்கள்

ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளில் அதிகாரிகளின் அலட்சியத்தால் குறைந்தது 4 அல்லது 5 தவறுகள் உள்ளன. இதனால் பொது மக்கள் ஸ்மார்ட் கார்டில் உள்ள தவறுகளை திருத்தம் செய்வதற்காக அலைகிறார்கள்.
அதிகாரிகளின் அலட்சியம்: ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டில் தவறுகளை திருத்த பொதுமக்கள் அலைகிறார்கள்
Published on

சென்னை:

‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டு பயன்பாட்டிற்கு வந்தால் முறைகேடுகள் தடுக்கப்படும், தவறுகள் நடக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த 8 வருடமாக இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வந்த போதிலும் இந்த வருடம் தான் செயல்பாட்டிற்கு வந்தது.

ஸ்மார்ட் கார்டு திட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைமுறைக்கு வந்த போதிலும் இன்னும் முழுமையாக பொது மக்களுக்கு வழங்கப்படவில்லை.

அதிக குடும்ப அட்டைகள் கொண்ட சென்னை பெருநகரத்தில் 25 சதவீதம் குடும்பங்களுக்கு தான் ஸ்மார்ட் கார்டு வினியோகிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் 70 சதவீதத்திற்கு அதிகமாக வழங்கப்பட்டு விட்டது.

வங்கி ஏ.டி.எம். கார்டு போல ஸ்மார்ட் கார்டும் கையடக்க அளவில் இருப்பதால் எளிமையாக பயன்படுத்த முடியும். குடும்பத்தில் உள்ள உறுப்பினர் யாராவது ஒருவர் வந்தால் தான் பொருட்களை பெற முடியும்.

வாங்காத பொருட்களுக்கு பில் பண்ண முடியாது. ரே‌ஷன் கடை ஊழியர்களின் பதுக்கல், போன்ற ‘தில்லு முள்ளு’ வேலைகளுக்கு ஸ்மார்ட் கார்டு முற்றுப்புள்ளி வைத்து விடும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டதோ அதனை நிறைவேற்ற முடியாமல் முடங்கி போய்கிடக்கிறது புதிதாக வாங்கிய ஸ்மார்ட் கார்டுகளில் பிழைகள் கொஞ்சமல்ல. ஒவ்வொரு கார்டிலும் குறைந்தது 4 அல்லது 5 தவறுகள் உள்ளன.

குடும்பத்தலைவர் போட்டோவுக்கு பதிலாக அவர்களின் குழந்தைகளின் போட்டோ இடம் பெற்றுள்ளது. பிறந்த தேதி, முகவரி, குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் போன்றவை தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளன.

குடும்பத் தலைவர் (கணவர்) உயிரோடு இருக்கும் போது மனைவியின் பெயர் மற்றும் புகைப்படத்தை அச்சடித்து கொடுத்துள்ளனர். ஆதார் கார்டில் உள்ள ஒவ்வொரு ‘சர்நேம்‘களையும் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயருக்கு முன்பாக அச்சிட்டுள்ளனர். முகவரியில் தவறு இல்லாமல் இருந்தால்தான் அரசு ஆலுவலகங்களில் ஸ்மார்ட் கார்டை ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால் பெரும்பாலான கார்டுகளில் கதவு எண், முகவரி தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் ஸ்மார்ட் கார்டில் உள்ள தவறுகளை திருத்தம் செய்வதற்காக அலைந்து திரிகிறார்கள்.

ரே‌ஷன் கடைகளுக்கும், அரசு இ.சேவை மையங்களுக்கும் படையெடுக்கிறார்கள். சேவை மையங்களில் ஸ்மார்ட் கார்டு தவறுகளை திருத்தம் செய்யவே கூட்டம் அலை மோதுகிறது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் மெத்தன போக்கால் ஸ்மார்ட் கார்டு பணிகள் செம்மையாக நடைபெறவில்லை. ஸ்மார்ட் கார்டு தயாரிக்க நீண்ட கால அவகாசம் எடுத்து கொண்ட பிறகும் எதற்காக இவ்வளவு தவறுகள் ஏற்பட்டன என்று தெரியவில்லை.

மாநில அரசு ஊழியர்கள் எடுக்கின்ற எந்த கணக்கெடுப்பாக இருந்தாலும் அதில் குறைகள் இல்லாமல் இல்லை. வாக்காளர் அடையாள அட்டை பணிக்கு புள்ளிவிவரங்கள் சேகரித்தல், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற எந்த பணியாக இருந்தாலும் அதில் தவறு இல்லாமல் இருப்பது அரிதாக உள்ளது.

அதே நேரத்தில் ஆதார் அட்டைக்காக எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் பிழையின்றி தயாரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்மார்ட் கார்டு தயாரித்து வழங்கிய பணியும் மெத்தன போக்கையே காட்டுகிறது.

20 சதவீத கார்டுகள் பிழைகளாக அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த தவறுகளுக்கு காரணமாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேதனையான கருத்தாகும்.

பிழைகளை செல்போன் மூலமாகவோ, வெப்சைட் வழியாகவோ திருத்தம் செய்யலாம். இது தவிர அனைத்து உதவி ஆணையர் அலுவலகங்களிலும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் பல இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஸ்மார்ட் கார்டு பிழைகள் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றன என்று சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com