

தஞ்சாவூர்:
தஞ்சை கீழராஜவீதியில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், மாவட்ட தலைவர் பொன்.வைத்தியநாதன், தி.மு.க. மாவட்ட விவசாய அணியை சேர்ந்த ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மனோகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன்சேவியர்ராஜ், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நல்லதுரை, பேரழிப்புக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கதிராமங்கலம், நெடுவாசலில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அவற்றை ஒடுக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்திய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது.
சேலத்தில் வளர்மதி என்ற மாணவி, நெடுவாசல் போராட்டத்துக்கு துண்டறிக்கை வழங்கினார் என்ற காரணத்துக்காக அவர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டு உள்ளது. சிதம்பரத்தில் மாணவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
இவற்றை கண்டிக்கும் வகையிலும் கடலூர், நாகை மாவட்டங்களில் 45-க்கும் மேற்பட்ட கிராமங்களை பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் ஆக மத்திய அரசு அறிவித்ததை கண்டிக்கும் வகையிலும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்தை எதிர்க்கும் வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் மாநில தலைவர்களுடன் பேசி 5 மாவட்டங்களிலும் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி அனைவரின் ஒப்புதல் பெற்று முற்றுகை போராட்டம் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.