

பனாமா கேட் ஊழல் புகாரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி இழந்தார். அதை தொடர்ந்து அவரது கட்சியைச் சேர்ந்த ஷாகித் ககான் அப்பாசி இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது நவாஸ் ஷெரீப் போட்டியிட்ட லாகூர் எம்.பி. தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு வருகிற செப்டம்பர் 17-ந்தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அதில் நவாஸ் செரீப் தனது தம்பியும், பஞ்சாப் முதல்-மந்திரியாக இருக்கும் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை போட்டியிட செய்து 45 நாளில் பிரதமராக்க முடிவு செய்து இருந்தார்.
இதுகுறித்த ஆலோசனை கூட்டம் லாகூரை அடுத்த முர்ரேவில் சாங்லா காலி பகுதியில் உள்ள ஷெஹ்பாஸ் ஷெரீப் வீட்டில் நடந்தது. இதில் பங்கேற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் பிரிவு) கட்சியின் நிர்வாகிகள் மற்றும் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் முதல்-மந்திரி பதவியில் இருந்து ‘ஷெஹ்பாஸ் ஷெரீப்பை நீக்கி விட்டு அனுபவம் இல்லாதவரை அப்பதவியில் அமர்த்துவது சரியாக இருக்காது.
ஏனெனில் பஞ்சாப் மாகாணம் தங்களது கட்சிக்கு சாதகமான பகுதி அங்கிருந்துதான் அதிக எம்.பி.க்கள் வெற்றி பெற முடியும். எனவே ஷெஹ்பாஸ் ஷெரீப் பிரதமராவதை விட பஞ்சாப் முதல்- மந்திரியாக நீடிப்பதே சிறந்தது என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதை நவாஸ் ஷெரீப் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. எனவே அப்பாசியே எஞ்சிய 10 மாதங்களுக்கும் பிரதமராக நீடிக்கிறார். மேலும் ஷெஹ்பாஸ் ஷெரீப்புக்கு பதிலாக அவரது மகன் ஹம்சாவை பஞ்சாப் முதல்-மந்திரியாக்க திட்டமிடப்பட்டிருந்தது.
அது நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம்நவாசுக்கு பிடிக்கவில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் 2 பெரும் பதவிகளில் இருப்பதை அவர் விரும்பவில்லை. எனவே அப்பாசியையே தொடர்ந்து பதவி வகிக்க செய்வதற்கு அதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.