

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை.
தேர்தலில் சட்டவிரோத குடியேறிகள், ஊடுருவல்காரர்களை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அரவணைப்பதாக மோடி, அமிஷ் ஷா உள்ளிட்ட தலைவர்கள் மேற்கு வங்கம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர்.
இருப்பினும் மேற்கு வங்க வங்காளி முஸ்லிகளை ஊடுருவல்காரர்கள் என போலியான பிம்பத்தை கட்டமைத்து பாஜக வங்காள மக்கள் மனதில் மாயையான அச்சத்தை விதைத்து வாக்குகளை அறுவடை செய்வதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
தற்போது மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்று சுவேந்து அதிகாரி முதல்வர் பொறுப்பேற்றுள்ள நிலையில் வங்கதேசத்தில் இருந்து வந்த சட்டவிரோத குடியேறிகள் என்ற முத்திரையின்கீழ் பல குடும்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சட்டவிரோதக் குடியேறிகளுக்கான "தடுப்பு முகாம்களை" அமைக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிந்து, அகற்றி, நாடு கடத்துவது என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதியைச் செயல்படுத்துவதன் முதல்கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வரம்பிற்குள் வராத அனைத்துக் குடியேறிகளும் சட்டவிரோதக் குடியேறிகளாகவே கருதப்படுவார்கள் என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வங்கதேசத்தினர், ரோஹிங்கியாக்கள் மற்றும் சிறைத்தண்டனை முடிந்தும் நாடு கடத்தல் நடவடிக்கைகள் நிறைவடையாத வெளிநாட்டுத் கைதிகளைப் பாராமரிப்பதற்காக இந்தத் தற்காலிகத் தடுப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.
முன்னதாக சுவேந்து அதிகாரி அறிவித்த புதிய விதிமுறைகளின்படி, சட்டவிரோதக் குடியேறிகள் என்ற குற்றச்சாட்டில் பிடிபடுபவர்கள் இனி உள்ளூர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட மாட்டாது.
மாநில போலீசாரோ அல்லது ரயில்வே பாதுகாப்புப் படையினரோ ஊடுருவல்காரர்களைக் கைது செய்தால், அவர்களை நேரடியாக எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பிஎஸ்எப் அதிகாரிகள், வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை நேரடியாக எல்லை வழியே திருப்பி அனுப்பிவிடுவார்கள்.
இது கைது செய்யப்படுபவர்களுக்கு சட்ட உரிமையை மறுக்கும் செயல் என்றும் தாங்கள் இந்தியர்களே என்பதை நிரூபிக்க இஸ்லாமியர்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பான நீதிமன்றத்தில் கதவுகளை அவர்களுக்கு அடைப்பது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.