மம்தா வீட்டில் சிஐடி சோதனை...

மே 6-ஆம் தேதி நடந்த கட்சி கூட்டத்தின் அசல் தீர்மானப் புத்தகத்தை உடனடியாக ஒப்படைக்க உத்தரவு!
MamataBanerjee, CIDInvestigation
MamataBanerjee, CIDInvestigation
Published on

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகள் போலியாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியின் கொல்கத்தா இல்லத்திற்கு மேற்கு வங்காள குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் குழு இன்று அதிரடியாக வந்துள்ளது.

மம்தா பானர்ஜி 'இந்தியா' கூட்டணி கூட்டத்திற்காக டெல்லியில் உள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சியின் முக்கியத் தலைவரான அபிஷேக் பானர்ஜியின் இல்லத்திற்கு கடந்த வாரம் சென்ற சிஐடி அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

மே 6 அன்று நடந்ததாகக் கூறப்படும் கட்சி கூட்டத்தில் 70 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றதாக அவர் சமர்ப்பித்த ஆவணத்தில், பல எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்துகள் போலியாகப் போடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரிக்க மேற்கு வங்காள காவல் துறையின் துணைக் காவல் பொது ஆய்வாளர் தலைமையில் 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இதுவரை 13 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடம் சி.ஐ.டி போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அதில் மூன்று எம்.எல்.ஏ-க்கள், கூட்டப் புத்தகத்தில் இருப்பது தங்களது உண்மையான கையெழுத்து இல்லை என அதிரடியாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், கேன்னிங் பூர்பா தொகுதி எம்.எல்.ஏ தான் அந்த கூட்டத்திலேயே கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மே 6-ஆம் தேதி நடந்த கூட்டத்தின் அசல் புத்தகத்தைக் கொண்டு வந்து ஆஜராகுமாறு அபிஷேக் பானர்ஜிக்கு சி.ஐ.டி உத்தரவிட்டுள்ளது.

கட்சிப் பதவிகள் நியமனம் தொடர்பாக மே 6 அன்று நடந்த கூட்டத்தில் 70 எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்திட்டதாகக் கூறி அதன் நகலைச் சபாநாயகரிடம் அபிஷேக் பானர்ஜி சமர்ப்பித்தார்.

ஆனால், அப்படி எந்தவொரு முடிவும் மே 6 அன்று எடுக்கப்படவில்லை என்றும், தங்களது கையெழுத்துகள் போலியாகப் போடப்பட்டுள்ளது என்றும் கூறி இரண்டு டி.எம்.சி எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரிடம் புகார் அளித்தனர்.

சட்டமன்ற முதன்மைச் செயலாளரின் புகாரின் பேரில் ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் மோசடி மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com