

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் கோத்வாலி அமைந்துள்ளது.
கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தலித் சமூக இளைஞர் மனோஜ் அஹிர்வார் (30).
மனோஜ்க்கு தெரிந்தவரான மோனு யாதவ் என்ற ஆதிக்க சாதி நபர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். மோனு யாதவ் மற்றும் அவரின் நண்பர்கள் அங்கு மது விருந்து நடத்தியுள்ளனர்.
மனோஜ் அங்குச் சென்றபோது, மோனு யாதவ் தனது சாதி ஆதிக்க திமிரோடு, "என் கால்களைப் பிடித்துவிடு" என்று கட்டளையிட்டுள்ளார்.
அதற்கு மனோஜ் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்ததால் ஆத்திரமடைந்த மோனு யாதவ் மற்றும் அவரது நண்பர்கள் மனோஜ் அஹிர்வாரை ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டி பெல்ட்கள் மற்றும் தடிகளை கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மனோஜ் மயங்கி விழுந்தார். இரவு நேரமாகியும் மனோஜ் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.
இறுதியாக மோனு யாதவின் வீட்டில் படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்த மனோஜை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவரை மேல் சிகிச்சைக்காக ஜான்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அவரைப் பரிந்துரைத்தனர்.
ஆனால், ஜான்சிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மனோஜ் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் லலித்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளியான மோனு யாதவ் மற்றும் அவனது கூட்டாளிகள் இருவரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சாதிய மோதல் வெடிக்காமல் தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.