மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த 4 மாடி குடியிருப்பு கட்டிடம்.. 8 பேர் சடலங்களாக மீட்பு

48 அறைகளை கொண்ட இந்த கட்டிடம் பாதுகாப்பற்றது என பிவாண்டி நகராட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்
இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்
Published on

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடித்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தானேவில் உள்ள பிவாண்டி பாலாஜி நகரின் கங்காராம் வாடா பகுதியில் உள்ள கோஹினூர் பில்டிங் என்ற அந்த குடியிருப்பு கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று இரவு 11:00 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.

விபத்து

ஒவ்வொரு தளத்திற்கும் 12 அறைகள் வீதம் 48 அறைகளை கொண்ட இந்த கட்டிடம் பாதுகாப்பற்றது என பிவாண்டி நகராட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது. இருந்தபோதும் அங்கு மக்கள் வாசித்துள்ளனர். மேலும் கீழ் தளத்தில் பழுது பார்க்கும் பணிகளும் நடந்து வந்துள்ளன.

நேற்று இரவு 9 மணி அளவிலேயே கட்டிடத்தில் பலத்த சத்தங்கள் கேட்டுள்ளன. இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கட்டிடத்தில் இருந்த குடும்பங்கள் வெளியேறின. இருப்பினும் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உட்பட சிலர் உள்ளேயே சிக்கியுள்ளனர்.

இரவு 11 - 11.30 மணியளவில் கட்டிடத்தின் பி-விங் பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்க இரவு முழுவதும் போராடினர்.

ஆனால் துரதிஷ்டவசமாக இதுவரை 8 பேர் சடலங்களாக மட்டுமே மீட்டப்பட்டுள்ளனர்.

தகவல்

இதுகுறித்து பிவாண்டி தீயணைப்பு அதிகாரி நிதின் சவான் கூறுகையில், "உள்ளூர்வாசிகளின் தகவல்படி, கட்டடத்தில் வசித்த 6 பேர் மற்றும் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் காணாமல் போயிருந்தனர்.

இதுவரை இடிபாடுகளிலிருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டு ஐ.ஜி.எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த தொழிலாளர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள், ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களுடன் மீட்புப் படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com