வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: ராகுல் காந்தி- பிரியங்கா நாளை மீண்டும் பிரசாரம்

2 நாட்கள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி டெல்லி திரும்புகிறார்.பிரியங்கா காந்தி வருகிற 7-ந்தேதி வரை வயநாடு தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: ராகுல் காந்தி- பிரியங்கா நாளை மீண்டும் பிரசாரம்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால், அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார்.

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானது. அதேபோன்று செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக பதவியேற்றதால் அந்த தொகுதிகளும் காலியாகின.

இதனால் வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி முடிந்தது.

வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்கள் கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.

அவர்களுடன் சேர்த்து வயநாடு தொகுதியில் மொத்தம் 21 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனையில் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதில் பிரியங்கா காந்தி உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி, நவ்யா ஹரிதாஸ், சத்யன் மொகேரி உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனு தாக்கல் செய்த கடந்த மாதம் 23-ந்தேதியே, பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக ராகுல்காந்தியும் பிரசாரம் செய்தார். அவர்கள் இருவரும் வாகனத்தில் ரோடு-ஷோ சென்றும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியும் ஆதரவு திரட்டினார்கள்.

அதன் பிறகு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் டெல்லிக்கு திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக அவர்கள் இருவரும் மீண்டும் கேரளாவுக்கு நாளை(3-ந்தேதி) வருகின்றனர்.

அவர்கள் நாளை காலை 11 மணிக்கு மானந்தவாடி காந்தி பூங்கா பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகின்றனர். மாலை 3 மணிக்கு அரிக்கோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் இருவரும் கலந்து கொள்கிறார்கள்.

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் 2-வது நாளாக நாளை மறுநாள் (4-ந்தேதி) கூட்டு பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். காலை 10 மணிக்கு சுல்தான்பத்தேரி, 11 மணிக்கு புல்பள்ளி, 11.50 மணிக்கு முள்ளென்கொல்லி, மதியம் 2 மணிக்கு கல்பெட்டா, மாலை 3.50 மணிக்கு வைத்திரி ஆகிய பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

2 நாட்கள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி டெல்லி திரும்புகிறார். ஆனால் பிரியங்கா காந்தி வருகிற 7-ந்தேதி வரை வயநாடு தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் திறந்த வாகனத்தில் சென்ற படி வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவார் எனவும், பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com