

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில நிர்வாகி ஷான் என்பவர் கடந்த 18-ந் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார்.
ஷான் கொலை நடந்த சில மணி நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ரஞ்சித் சீனிவாசன் என்பவரும் வெட்டி கொல்லப்பட்டார்.
ஆலப்புழாவில் அடுத்தடுத்து நடந்த அரசியல் படுகொலைகள் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள முதல் மந்திரி பினராய் விஜயன், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா உள்பட பலரும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஆலப்புழாவில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் அனைத்து கட்சியினரின் அமைதி கூட்டமும் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அரசியல் கொலையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி ஷான் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பாரதிய ஜனதா நிர்வாகி ரஞ்சித் சீனிவாசன் கொலையில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.
இதில் நேற்று அதே பகுதியை சேர்ந்த நிஷாத், ஆசிப், சுதீர், அர்ஷாத், அலி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 5 பேரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. இவர்களை தவிர மேலும் சிலருக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.