

கடந்த 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை தொடர்ந்து கிழக்கு லடாக்கில் டெப்சாங் சமவெளியில் இருந்து வடக்கேயும், தெற்கே டெம்சோப் பகுதியிலும் இரு தரப்பிலும் தலா 50 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டாக நடந்த இருதரப்பு பேச்சு வார்த்தையை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்குள் படைகளை வாபஸ்பெற ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனாலும் தொடர்ந்து படைகள் குவிக்கப்பட்டு இருந்ததால் எல்லையின் பல இடங்களிலும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.கடந்த 20 மாதங்களாக எல்லையில் பதட்டம் நீடிக்கிறது.
இந்திய எல்லையில் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவும் தற்போது பாதுகாப்பு நிலைகளை அதிகரித்து வருகிறது.
இந்திய எல்லையையொட்டி சாலைகள், குடியிருப்புகள், ஹெலிகாப்டர் இறங்கும் தளம் உள்பட பாதுகாப்பு நடைமுறைகளை சீனா மேற்கொண்டது.
இந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக லடாக்கின் பாங்காங் ஏரியின் இருகரைகளையும் இணைக்கும் வகையில் சீனா புதிய பாலத்தை கட்டி வருகிறது. செயற்கைகோள் புகைப்படம் மூலம் தற்போது இது அம்பலமாகி உள்ளது. கிழக்கு லடாக்கில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த தகவலை செயற்கைகோள் புகைப்படத்தின் அடிப்படையில் புவிசார் புலனாய்வு நிபுணர் டேமியன் சைமன் என்பவர் வெளியிட்டுள்ளார்.
இந்த பாலம் கட்டுவதன் மூலம் சீனா தனது படைகளையும், ஆயுதங்களையும், நவீன பீரங்கிகளையும் எளிதாகவும், விரைவாகவும் இந்திய எல்லைக்கு அருகே நிலைநிறுத்த முடியும்.
மேலும் இந்தியா- சீனா இடையேயான எல்லை பிரச்சினை தீரும்வரை சீனா தனது படையை எல்லையில் குவிக்க மேலும் ஒரு வழித்தடமும் அதற்கு கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலைபாங்கான பகுதி களில் இந்திய படைகள் விரைவாக செல்லும் வசதி உள்ளது. 2020-ல் இந்த வசதியால் சீனாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு சீன ராணுவம் இந்த புதிய பாலத்தை கட்டி வருகிறது.
லடாக்கின் பாங்காங் ஏரி சுமார் 134 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம், 270 சதுர மைல் பரப்பளவு கொண்டதாகும். இதன் 40 சதவீத பரப்பளவு இந்தியாவிடமும், 50 சதவீத பரப்பளவு சீனாவிடமும் உள்ளது.
சுமார் 10 சதவீத பரப்பளவு சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது. இந்த ஏரி 8 பாகங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் 1 முதல் 4 வரையிலான பாகங்கள் இந்தியாவின் எல்லைக்கு உட்பட்டவையாகும்.
சமீபகாலமாக பாங்காங் ஏரி பகுதியில் இந்திய ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டே பாங்காங் ஏரியில் சீனா பாலத்தை கட்டத் தொடங்கியுள்ளது. தற்போது பாலம் கட்டும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பாஜக எம்.பி மனோஜ் திவாரிக்கு 2-வது முறை கொரோனா பாதிப்பு