பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நவ்ஜோத் சிங் சித்து
நவ்ஜோத் சிங் சித்து
Published on

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 13-ந் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது கட்சியை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சோனியாகாந்தியிடம் செயற்குழு கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் தேர்தல் தோல்வி காரணமாக 5 மாநில காங்கிரஸ் தலைவர்களையும் ராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி உத்தரவிட்டார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில் ‘மாநில காங்கிரஸ் கமிட்டிகளை மறுசீரமைப்பு செய்ய வசதியாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்’ என்றார்.

இந்த நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பாக சித்து தனது டுவிட்டர் பதிவில் கூறும்போது, காங்கிரஸ் தலைவரின் விருப்பப்படி நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்துவின் அரசியல் பிரவேசம் பா.ஜனதாவில் இருந்து தொடங்கியது. அந்த கட்சியில் எம்.பி.யாக இருந்த அவர் பின்னர் காங்கிரசில் இணைந்தார்.

முன்னாள் முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங்குடன் மோதல் போக்கை கடைபிடித்தார். இதனால் அம்ரீந்தர் காங்கிரசை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. காங்கிரசில் ஏற்பட்ட பல்வேறு கோஷ்டி பூசலுக்கு சித்து காரணமாக இருந்தார். அவரால்தான் காங்கிரஸ் பஞ்சாப்பில் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டதாக கருதப்பட்டது.

தேர்தல் தோல்வி காரணமாக கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரீஷ் ராயசோடான்கர் ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார். அவரும் தனது பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைத்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com