குஜராத்தில் புல்டோசரால் 100 வீடுகள் இடிப்பு.. யார் உத்தரவிட்டது? என்றே தெரியாததால் நீடிக்கும் குழப்பம்

மாநகராட்சியே செய்யவில்லை என்றால், பட்டப்பகலில் ஒட்டுமொத்த குடிசைப் பகுதியையும் அழிக்க யாருக்கு இவ்வளவு தைரியம் வந்தது?
குஜராத்தில் புல்டோசரால் 100 வீடுகள் இடிப்பு.. யார் உத்தரவிட்டது? என்றே தெரியாததால் நீடிக்கும் குழப்பம்
Published on

குஜராத் மாநிலம் சூரத் நகரின் கத்தார்காம் பகுதியில் உள்ள நசீர்நகர் குடிசைப் பகுதியில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் சுமார் 100 வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

அங்கு வசித்து வந்த நூற்றுக்கணக்கான ஏழை குடும்பங்கள் தங்களது வீடுகள், உடமைகளை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர்.

இதில் அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த வீடுகளை இடிக்க யார் உத்தரவிட்டார், எதன் அடிப்படையில் இந்த வீடுகள் இடிக்கப்பட்டன என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை.

இதுவரை இதற்கு எந்த அரசுத் துறையும் பொறுப்பேற்கவில்லை

இச்சம்பவம் குறித்து சூரத் மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதாக தெரிவித்த பாஜக எம்எல்ஏ வினு மோர்டியா,

"அதிகாரிகள் அளித்த தகவல் அதிர்ச்சியளிக்கிறது. மாநகராட்சிக் குழுவினர் அங்கு சட்டப்பூர்வ சாலை எல்லைக் கோடுகள் அளவீடுகளை எடுப்பதற்காக மட்டுமே சென்றிருந்தனர்.

வீடுகளை இடிப்பதற்கான எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, எந்தவொரு அதிகாரப்பூர்வ நடவடிக்கைக்கும் உத்ராவிடப்படவில்லை.

மாநகராட்சி கோப்புகளிலும் இதற்கான பதிவுகள் எதுவும் இல்லை. மாநகராட்சியே செய்யவில்லை என்றால், பட்டப்பகலில் ஒட்டுமொத்த குடிசைப் பகுதியையும் அழிக்க யாருக்கு இவ்வளவு தைரியம் வந்தது? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை தேவை" என்று வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூர்வாசியான ஜாவித் ஷா பேசுகையில், "ஜேசிபி இயந்திரங்கள் எங்கள் வீடுகளை இடித்த போது, பெண்களும் குழந்தைகளும் கதறி அழுதனர். ஆனால், போலீசார் அங்கு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் நின்றனர்.

இந்த இடிப்பு சட்டவிரோதமானது என்றால், போலீசார் ஏன் இடிப்பு உத்தரவையோ அல்லது மாஜிஸ்ட்ரேட் அனுமதியையோ அவர்களிடம் கேட்கவில்லை? ஏன் தடுக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த பிசிஆர் வாகன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உள்விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இதன் பின்னணியில் நில மாபியாக்கள் - அரசு அதிகாரிகளின் கூட்டுப் சதி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com