ரஷிய ராணுவத்திற்காக சண்டையிட்டு உக்ரைன் போரில் கொல்லப்பட்ட இந்தியர்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

ரஷிய போரில் ஈடுபட்ட 217 இந்தியர்களில் 49 பேர் உயிரிழந்துவிட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
Indian Fighters in Russia
Supreme Court orders DNA matching, coordination and compensation support
Published on

உச்ச நீதிமன்றம் உத்தரவு

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் நடத்தி வரும் போர் நடவடிக்கையில், ரஷிய ராணுவத்துடன் இணைந்து போரில் காயமடைந்த அல்லது காணாமல் போன இந்தியர்களின் குடும்பத்தை ஒருங்கிணைப்பதற்காக, ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ராணுவ மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுடன் குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ-வை சரிபார்த்து, புது டெல்லியில் உள்ள ரஷிய தூதரகத்திற்கு இழப்பீடு கோருவதற்கு அவர்களுக்கு உதவவும் உத்தரவிடப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்புடைய அனைத்து தகவல்களும் அவர்களின் தாய்மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உக்ரைன் ரஷிய போர்

ரஷிய ராணுவம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் ரஷிய ராணுவத்திற்கு ஆதரவாக இந்தியர்கள் போர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போரில் 217 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களில் 49 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 6 பேர் போரில் காணாமல் போனதாகவும், மேலும் 23 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் மத்திய அரசு கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்

இதையடுத்து வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி கூறுகையில்,

“இறப்புகளை உறுதிபடுத்தவும், காணாமல் போனவர்களை கண்டறியவும், ராணுவ சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் நாடு திரும்புவதற்கு உரிய வசதிகளை செய்யவும், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், ரஷிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து வருகிறது.

ரஷிய ஆயுத படைகளில் இருந்து, இதுவரை 139 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்களை இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது” என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், “சுமார் 5,000 அமெரிக்க டாலர் கையெழுத்து ஊக்கத்தொகை, 2,500 அமெரிக்க டாலர் மாத சம்பளம், ரஷிய குடியுரிமைக்கான வாக்குறுதிகள் ஆகியவையும் அளிக்கப்பட்டுள்ளது.

போரில் மரணம் ஏற்பட்டால் சுமார் 1,68,000 அமெரிக்க டாலர் இழப்பீடு மற்றும் நிதிச் சலுகைகளை அளித்து ரஷிய அதிகாரிகள் வெளிநாட்டினரை பணியில் சேர ஈர்த்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண உதவும் வகையில் 21 பேரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ரஷ்ய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இந்தியத் தூதரகம் வாயிலாகப் பல இழப்பீட்டுக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, சில குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுவிட்டது,” என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com