

கணவன்- மனைவி இடையேயான தகராறுகளுக்கு பழிவாங்க குடும்பத்தினர் மீது வழக்கு போடுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்து உள்ளது.
மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 2023-ம் ஆண்டு பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர். அவர்களை பராமரிப்பது தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே எழுந்த தகராறு காரணமாக இருவரும் அடுத்தவரின் குடும்பத்தினரை வழக்கில் சிக்க வைத்து உள்ளனர்.
அந்த வகையில் இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தாய் மாமன் மீது அந்த கணவன் புகார் அளித்து உள்ளார். அதற்கு பதிலடியாக மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவரின் சகோதரி மீது அந்த மனைவி புகார் அளித்தார். இந்த புகார்களின்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யுமாறு சிறுவனின் அத்தை மும்பை ஐகோர்ட்டை நாடினார். ஆனால் அதை விசாரித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தனர். இதை எதிர்த்து அவர் சுப்ரிம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதை நீதிபதிகள் பர்திவாலா, வினோத் சந்திரன் அமர்வு விசாரித்தது. பின்னர் சிறுவனின் அத்தை மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது நீதிபதிகள் பல்வேறு கவலைகளையும் வெளியிட்டனர்.
அவர்கள் கூறியதாவது:-
பொதுவாக திருமண வாழ்வில் கணவன்- மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் எழும் வழக்குகளில், பழி வாங்குவதற்காக மாமியார்- மாமனாரை இழுத்து வருவது சர்வ சாதாரணம். மேலும், ஒருவரையொருவர் பழிசுமத்துவதற்காகப் பிள்ளைகளும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறார்கள்.
ஆனால் இங்கு, தனது மகன் அவனது தந்தை வழி அத்தையால் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறான் என்று விவாகரத்து பெற்ற தாய் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
சிறுவனின் இரட்டை சகோதரிக்கு எதிராக தாய்மாமா மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்த தந்தையால் பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு பதிலடியாக இந்த வழக்கானது பதியப்பட்டு உள்ளது. தாய்வழி உறவினர்களுக்கு எதிராக தந்தை வழக்கு பதிவு செய்த பின்னரே இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. இது குழந்தைகளுக்கு எதிரான உண்மையான குற்றச்சாட்டாக இல்லாமல், குழந்தை பராமரிப்பு உரிமை போராட்டத்தில் இருந்து பிறந்த ஒரு கசப்பான பழிவாங்கும் பதிலடி என்பது அம்பலமாகிறது.
இவ்வாறு நீதிபதிகள் அதிர்ச்சி மற்றும் கவலையுடன் தெரிவித்தனர்.