பொதுத்தேர்வை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி மும்பையில் திரண்ட மாணவர்கள்

பொது தேர்வை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி மும்பையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை தாராவியில் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை படத்தில் காணலாம்
மும்பை தாராவியில் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை படத்தில் காணலாம்
Published on

மும்பை :

மராட்டியத்தில் கொரோனா 3-வது அலை உச்சத்துக்கு சென்று தற்போது பரவல் குறைந்ததை அடுத்து கடந்த மாதம் 24-ந் தேதி 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளதால், இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நேரடியாக நடத்தப்பட உள்ளதாக தகவல் பரவியது.

இந்தநிலையில் 10, 12-ம் வகுப்பு பொது தேர்வை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி சிலர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று காலையில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட்டின் சொந்த தொகுதியான தாராவியில் திரள தொடங்கினர். இவர்கள் காலை 11 மணியளவில் திடீரென தாராவி அசோக்மில் நாக்கா பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு நேரடியாக பொது தேர்வு நடத்தக்கூடாது, ஆன்லைனில் நடத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். திடீரென மாணவர்கள் அதிகளவில் திரண்டதால் தாராவி சயான்- பாந்திரா லிங்க் ரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாணவர்களை கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர். எனினும் அவர்கள் நீண்ட நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தாராவி சயான் - பாந்திரா லிங்க் ரோடு, 90 அடி சாலையில் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கல்வி மந்திரி வீட்டை நோக்கி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி சாலையில் திரண்டு இருந்த மாணவர்களை கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள் போராட்டம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சமூகவலைதளத்தில் பரவிய தகவலை வைத்து தானே, நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூட வந்து உள்ளனர். அவர்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி எதுவும் இல்லை.

அவர்கள் மந்திரி வர்ஷா கெய்க்வாட் வீடு நோக்கி செல்ல முயன்றனர். எனவே தடுத்து நிறுத்தினோம். தடியடியில் மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிலர் மட்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்" என்றார்.

இந்தநிலையில் மாணவர்களை போராட்டத்தில் ஈடுபட மந்திரி வர்ஷா கெய்க்வாட் வீடு அருகே திரளுமாறு யூ-டியூப் பிரபலமான இந்துஸ்தானி பாவு என்ற விகாஸ் பாதக் மாணவர்களை தூண்டியது தெரியவந்து உள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்துஸ்தானி பாவு என்ற யூ-டியூபர் மாணவர்களை தாராவி அசோக் மில் நாக்கா பகுதியில் திரளுமாறு தூண்டியதற்காக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். அவர் போராட்டம் நடந்த பகுதிக்கு அருகில் இருந்து உள்ளார். முதல் கட்ட விசாரணையில் இந்துஸ்தானி பாவு மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுமாறு சமூகவலைதளத்தில் கூறியது தெரியவந்து உள்ளது" என்றார்.

மற்றொரு போலீஸ்காரர் கூறுகையில், " இந்துஸ்தான் பாவு தாராவி போலீஸ் நிலையம் வந்து மாணவர்கள் மந்திரி வர்ஷா கெய்க்வாட் வீட்டுக்கு செல்வதை தடுக்க வேண்டாம் என கூறினார். மூத்த அதிகாரிகள் அது தொடர்பாக அவரிடம் கடிதம் கேட்டனர். மேலும் அந்த கடிதம் மந்திரிக்கு அனுப்பப்படாது என்றனர். எனினும் அவர் போலீஸ் நிலையத்தில் இருந்து சென்றுவிட்டார்" என்றார்.

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் பிரனாய் அசோக்கிடம் கேட்ட போது, " மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் " என்றார்.

மாணவர்களை போராட்டத்துக்கு தூண்டியதாக கூறப்படும் இந்துஸ்தானி பாவு முன்னாள் இந்தி பிக்பாஸ் போட்டியாளர் ஆவார். இவர் யூ-டியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். முன்னதாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் நேற்று தாராவி மட்டுமின்றி மும்பை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com