ரூ.140-க்கு உடலை விற்கிறேன் என கொச்சைப்படுத்துகின்றனர்.. இணையவழி துன்புறுத்தல்கள் குறித்து போராட்டத்தில் பங்கேற்ற மாணவிகள் குமுறல்

'நீ முஸ்லிம், உனக்குத் தனி பட்டியல் தயாராகும், நீ தேசத்துரோகி' என்றனர்.
ரியா ஆஹிர்
ரியா ஆஹிர்
Published on

தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் பங்கேற்றதற்காக இணைவழி துன்புறுத்தல்களை எதிர்க்கொள்ளும் மாணவிகள் சிலருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அம்மாணவிகள் தங்களை குறிவைத்து இணையத்தில் பரவும் கொச்சையான விமர்சனங்கள், மிரட்டல்கள் மற்றும் காவல்துறையின் பாராமுகம் குறித்து தங்கள் வேதனையை பகிர்ந்துகொண்டனர்.

மாணவிகள் குமுறல்

மும்பையை சேர்ந்த ரியா ஆஹிர் என்ற மாணவி கூறுகையில், "மத்திய மும்பையின் சிவாஜி பூங்காவில் நடைபெற்ற போராட்டத்தின் போது, 20 மாணவர்களை சட்டவிரோதமாக கைது செய்வதை தடுக்க நான் போலீஸ் வாகனத்தின் முன் நின்றேன். அதற்காக தற்போது எனக்கு எதிரான இணையவழி மிரட்டல்களும் துன்புறுத்தல்களும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

இது வெறும் டிரோலிங் அல்ல, குற்றம். இணையவாசிகள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தொண்டர்களும் எனக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நான் ரூ.140-க்கு உடலை விற்கிறேன் என்றெல்லாம் கொச்சையான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். ஜூலை 27 அன்றே காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை." என்று வேதனை தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஃபரா நாஸ் என்ற மாணவி கூறுகையில், " டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராடிய எங்களை காவல்துறை கொடூரமாகத் தாக்கியது.

மூன்று மணி நேரம் பேருந்தில் அடைத்து வைத்து, 'நீ முஸ்லிம், உனக்குத் தனி பட்டியல் தயாராகும், நீ தேசத்துரோகி' என்றனர்.

'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'வந்தே மாதரம்' என முழக்கமிட கட்டாயப்படுத்தினர். அதன்பின்னரும் எங்களை தேசத்துரோகிகளாக சித்தரித்தனர்." என்றார்.

ஜார்கண்டடை சேர்ந்த நூதன் தாபோ என்ற மாணவி பேசுகையில், " ஜூலை 20 நாடாளுமன்றம் பேரணி சென்ற போது என் மீது 'பெல்லட் துப்பாக்கி' குறிவைக்கப்பட்டது. நான் திரும்பி நடக்கும் போது பின்புறமாகச் சுட்டதில் என் காதில் பலத்த காயம் ஏற்பட்டது." என்றார்.

டெல்லியை சேர்ந்த முஸ்கான் சர்மா, "விதிகளை மீறி காவல்துறையினர் லத்தியால் எங்களது உடலின் கீழ் பகுதிகளில் தாக்கினர். இதற்குக் காரணமான அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும்." என்றார்.

ராகுல் காந்தி

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, மாணவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், நாட்டின் எதிர்காலம், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே அவர்கள் போராடியுள்ளனர் என்றும் கூறினார்.

15 வயது சிறுமியின் வீட்டிற்கு 'குண்டர்களை' அனுப்பி மன்னிப்பு கேட்க வற்புறுத்தியதாகக் குற்றம்சாட்டிய அவர், நியாயமான கல்வி முறை, வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி மற்றும் மாணவர்களின் எதிர்காலத்திற்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com