பரிகாரம் செய்ய வந்த போதை பொருள் கடத்தல் காரனை கைது செய்த போலீஸ்

காவல்துறையினர் அவனை நெருங்கிவிட்டதாக நினைக்கும் போதெல்லாம், ராகேஷ் ஜாட் அங்கிருந்து தப்பிவிடுவான்.
பரிகாரம் செய்ய வந்த போதை பொருள் கடத்தல் காரனை கைது செய்த போலீஸ்
Published on

மேற்கு மத்திய பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் ஜாட், மாநிலங்களுக்கு இடையேயான போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவன். ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் 2023-இல் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தொடர்பான வழக்கு ஒன்றில் இவன் தேடப்பட்டு வந்தான்.

இவனை கைது செய்பவர்களுக்கு 25,000 ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஏறக்குறைய நான்கு மாதங்களாக ராஜஸ்தான் மாநிலத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (ANTF) இவனை கண்டுபிடிக்க முயன்றது, ஆனால் அவன் தொடர்ந்து தப்பித்து வந்தான்.

அப்போதுதான், காவல்துறையின் இந்த நடவடிக்கையை ஒரு நிஜ வாழ்க்கை க்ரைம் த்ரில்லர் போல மாற்றிய அந்த திருப்பம் நிகழ்ந்தது. தொடர் காவல் நெருக்கடி மற்றும் சட்டவிரோத தொழிலில் ஏற்பட்ட இடையூறுகளால் விரக்தியடைந்த ராகேஷ், ஒரு ஜோதிடரை அணுகியதாக ராஜஸ்தான் காவல்துறைக்கு துல்லியமான தகவல் கிடைத்தது.

அவனது ஜாதகத்தில் உள்ள 'கால சர்ப்ப தோஷம்' காரணமாகவே அவனுக்கு துன்பங்கள் ஏற்படுவதாகவும், அந்த தடையை நீக்க உஜ்ஜைனியில், குறிப்பாக மகாகால் கோயிலுக்கு அருகில் சிறப்பு வழிபாடுகளை செய்ய வேண்டும் என்றும் அந்த ஜோதிடர் அவனிடம் கூறியதாக தெரியவந்தது.

இந்த தகவல் கிடைத்ததும், தேடுதல் வேட்டையின் திசை மாறியது. ராஜஸ்தான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று உஜ்ஜைனிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதிகாரிகள் சாதாரண யாத்ரீகர்களைப் போல வேடமணிந்து, மற்ற பக்தர்களை போலவே அந்தகோயில் நகரத்திற்குள் நுழைந்தனர்.

உலக புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோவில் முதல் உஜ்ஜைனியில் உள்ள சிறிய, அதிகம் அறியப்படாத கோவில்கள் வரை, சுமார் 15 கோவில்களில் அந்த குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியில், உஜ்ஜைனியில் உள்ள அதிகம் அறியப்படாத கோவில்களில் ஒன்றில் போலீசார் அவரை கண்டறிந்தனர்.

'கால சர்ப்ப தோஷ நிவரண' பூஜைகளைச் செய்வதற்காக ராகேஷ் அங்குள்ள பூசாரிகளுடன் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. மந்திரங்கள் ஓதப்பட்டு, காணிக்கைகள் செலுத்தப்பட்டு கொண்டிருந்தன. பல மாதங்களாக போலீசாரிடம் இருந்து தப்பித்து வந்த அந்த நபர், தனது விதியை மாற்றியமைக்க முயன்று கொண்டிருந்தார்.

ஆனால், யாத்ரீகர்கள் வேடத்தில் வந்த 'விதி' ஏற்கனவே அவரை நெருங்கிவிட்டது என்பது அவருக்கு தெரியவில்லை. இரண்டு மாநிலங்களில் நடந்த பல போலீஸ் சோதனைகளில் இருந்தும் தப்பித்த அந்த நபர், தனது துரதிர்ஷ்டத்தை போக்கிக்கொள்ள வந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com