திரிணாமுல் காங்கிரசுக்கு பின்னடைவு: மாநிலங்களவை எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார் சுகேந்து சேகர் ராய்!

"நான் உடல் அளவில் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸில் இருக்கிறேன், மனதளவில் இல்லை. இது வெறும் ஆரம்பம்தான், விரைவில் மக்களவையிலும் இதே போன்ற பிளவு ஏற்பட்டு கட்சி சீட்டுக் கட்டுப் போல சரியும்" என கூறியிருந்தார்.
Setback for TMC: Rajya Sabha MP Sukhendu Sekhar Ray Resigns!
Published on

மேற்கு வங்காள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுகேந்து சேகர் ராய் தனது பதவியைத் ராஜினாமா செய்துள்ளார். இன்று, தனது மாநிலங்களவை எம்பி பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்காள சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சந்தித்த வரலாற்றுச் தோல்வியைத் தொடர்ந்து, கட்சிக்குள் வெடித்துள்ள உள்கட்சிப் பூசலின் உச்சக்கட்டமாக இந்த ராஜினாமா பார்க்கப்படுகிறது.

சுகேந்து சேகர் ராய் தனது ராஜினாமா கடிதத்தில், மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால ஆட்சியை "அராஜக ஆட்சி" என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தத் தேர்தல் தோல்வி என்பது கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தில் நிலவி வந்த அராஜக ஆட்சிக்கு மக்கள் வழங்கிய இறுதித் தீர்ப்பாகும். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், தொழில் மற்றும் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தறிகெட்ட ஊழலும், நிர்வாகத் தோல்வியும் மலிந்து காணப்பட்டது. ஆர்.ஜி. கர் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் உட்பட மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த தொடர் அநீதிகள் மற்றும் வன்முறைகள் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. கட்சித் தலைமை இதுகுறித்து எந்தவொரு சுயபரிசோதனையும் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநிலத்தில் முதன்முறையாக வரலாற்று வெற்றியைப் பெற்று ஆட்சியமைத்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் புதிய முயற்சிகளையும், அவர்களது தேர்தல் அறிக்கையின்படி மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது வரலாறு காணாத உள்கட்சி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. ரிதாப்ரதா பானர்ஜி தலைமையில் சுமார் 58-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தனிக் குழுவாகப் பிரிந்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். சுகேந்து சேகர் ராய் தனது ராஜினாமாவுக்கு சில நாட்களுக்கு முன்பே, "நான் உடல் அளவில் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸில் இருக்கிறேன், மனதளவில் இல்லை. இது வெறும் ஆரம்பம்தான், விரைவில் மக்களவையிலும் இதே போன்ற பிளவு ஏற்பட்டு கட்சி சீட்டுக் கட்டுப் போல சரியும்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகளின் 'INDIA' கூட்டணிக் கூட்டத்திற்காக மம்தா பானர்ஜி டெல்லியில் இருக்கும் இதே நேரத்தில், அவரது கட்சியின் மிக முக்கியமான மற்றும் நீண்டகால பாராளுமன்றக் குரலாக ஒலித்த சுகேந்து சேகர் ராய் விலகியிருப்பது தேசிய அளவில் மம்தாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்பி-க்கள் கட்சியிலிருந்து விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்து வருவதால், மேற்கு வங்காள அரசியல் களம் மேலும் சூடேறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com