

செல்போன் பயன்பாட்டுக்கு எதிராக சிறுவர்கள் உடல் தகுதி, ஒழுக்கம், மன உறுதியை ஊக்குவிக்கும் வகையில் 4-ம் வகுப்பு மாணவன் 16 கி.மீ. தூரம் பள்ளிக்கு ஓடிச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினான்.
நவீன உலகில் குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் போட்டோ எடுப்பது, அதனுடைய குறும்புத்தனமான வீடியோக்களை ரீல்ஸ் எடுப்பது என செல்போன்களோடு குழந்தைகளுக்கு அப்போதே தொடர்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். முன்பெல்லாம் பெற்றோர் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட நிலாவை காட்டுவது, காக்கா கதை சொன்னார்கள். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதற்கும். சமாதானப்படுத்துவதற்கும் ஒரு கருவியாக செல்போன் மாறிவிட்டது.
செல்போன் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக குழந்தைகளுக்கு மன இறுக்கம் ஏற்பட்டு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதாக குழந்தை நல டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செல்போன் பயன்பாட்டில் இருந்து தடை விதிப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. மேலும், உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகளில் செல்போன் பயன்பாடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செல்போனிலேயே மூழ்கி கிடப்பதற்கு பதிலாக உடல் தகுதி, ஒழுக்கம், மன உறுதி ஆகியவற்றை உணர்த்தும் வகையிலும், வெளிப்புற செயல்பாடுகளில் ஆர்வத்தை வளர்த்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் உள்ள பின்தங்கிய குழந்தைகளுக்கான காப்பகத்தில் இருக்கும் 4-ம் வகுப்பு மாணவன் அரவிந்த் ரத்தோடு (வயது 10) பள்ளிக்கு செல்லும் முதல் நாளன்று 16 கி.மீ. தூரம் ஓடியே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நாடோடி இன குழுக்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் ஒரு காப்பகத்தில் அரவிந்த் ரத்தோடு தங்கி உள்ளான். முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், ஓட்டப்பந்தய வீரர்களின் முன்னிலையில் இந்த ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் அந்த சிறுவனை பாராட்டினர்.