வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்களை தவிர்க்க வேண்டும் - ஈரானுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்!

பேச்சுவார்த்தைகள் குறித்த ஈரானின் கண்ணோட்டம் தனக்கு தெரிவிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் கூறினார்.
எஸ். ஜெய்சங்கர்
Published on

வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீதான தாக்குதல்களை எந்த சூழலிலும் தவிர்க்குமாறு இந்தியா ஈரானை வலியுறுத்தியது. எந்தவொரு தரப்பினராலும் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் வெிளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் தெரிவித்தார். அராக்சியுடனான தொலைபேசி உரையாடலின் போது ஜெய்சங்கர் இதைக் குறிப்பிட்டார்.

"இப்பகுதியில் நிலவும் மோதல்கள் குறித்து எங்களின் ஆழ்ந்த கவலையை தெரிவித்தேன். வணிக கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீதான தாக்குதல்கள் எந்த சூழலிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

எந்தவொரு தரப்பினராலும் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. இந்தியா எப்போதும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர முயற்சிகளை ஆதரிக்கிறது," என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.

தொலைபேசி உரையாடல்:

தற்போதைய நிகழ்வுகள் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்த ஈரானின் கண்ணோட்டம் தனக்கு தெரிவிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் கூறினார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில் இரு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கும் இடையே இந்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.

ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இந்தியா தீவிர கவலையை வெளிப்படுத்தி வருகிறது.

இணையமைச்சர் தகவல்:

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களால் பிப்ரவரி முதல் 10 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

"மத்திய கிழக்கில் மோதல் தொடங்கியதில் இருந்து, 10 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் அங்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 75 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். தாக்குதல்களுடன் தொடர்பில்லாத ஒரு தனி விபத்தில், கத்தாரில் உள்ள ராஸ் லஃபான் எரிவாயு நிலையத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்," என்று சிங் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com