தர்மேந்திர பிரதானை வேறு துறைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது- ராகுல் காந்தி

மோடியின் மந்திரிசபையில் அவரை கல்வித்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றுவதே இதற்கான தீர்வு என்று பேசப்பட்டு வருகிறது.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on

தர்மேந்திர பிரதானை அங்கிருந்து மாற்றுவது, பின்னுக்குத் தள்ளுவது அல்லது முன்னுக்கு கொண்டு வருவது போன்ற எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை என்று கூறியுள்ளார்.

பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேறு துறை

மாணவர்களுக்கு 3 கோரிக்கைகள் உள்ளன. அவை சமரசத்திற்கு இடமில்லாத கோரிக்கைகள். ஊழல்வாதியும், திறமையற்றவரும், பொறுப்பற்றவருமான மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதே முதலாவது கோரிக்கை.

மோடியின் மந்திரிசபையில் அவரை கல்வித்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றுவதே இதற்கான தீர்வு என்று பேசப்பட்டு வருகிறது. இது மாணவர்களுக்கு ஏற்புடையதல்ல. யாருக்கும் ஏற்புடையதல்ல. இதற்கு காரணம், ஊழலுக்கும், இந்தியக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நேர்ந்துள்ள நிலைமைக்கும் தர்மேந்திர பிரதான் தான் ஒரு அடையாளமாக திகழ்கிறார்.

நீக்கப்பட வேண்டும்

நாட்டின் மிக மதிப்புமிக்க சொத்தான மாணவர்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் அழித்ததற்கான அடையாளமாக அவர் இருக்கிறார். எனவே, தர்மேந்திர பிரதானை அங்கிருந்து மாற்றுவது, பின்னுக்குத் தள்ளுவது அல்லது முன்னுக்கு கொண்டு வருவது போன்ற எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை. தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக போராட்டத்தின் போது இளம்பெண் காயமடைந்தார். நேற்று நான் உங்களுக்குக் கண்ணில் குண்டு பாய்ந்த ஒரு இளைஞரைக் காட்டினேன். அதுபோலவே, தடியடியால் கால்களும், தலைகளும் உடைக்கப்பட்ட, உடலில் பெல்லட் குண்டுகள் பாய்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இதைச் செய்தவர்கள், அதாவது இதைத் திட்டமிட்டவர்கள், செயல்படுத்தியவர்கள், தண்டிக்கப்பட வேண்டும்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

மூன்றாவது கோரிக்கை என்னவென்றால், இந்த செயல்களைச் செய்யும் ஒட்டுமொத்த அமைப்பின் தலைவரான பிரதமர் மோடி, மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு இழைத்த செயல்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

மாணவர்களையும், இளைஞர்களையும் தாக்குவது இந்த அமைப்புதான். நான் அவர்களிடம் பேசும்போது சொன்னேன். கவலைப்படாதீர்கள். இந்திய அரசாங்கத்தின் ஒட்டு மொத்த வலிமையோ அல்லது அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரோ நினைத்தாலும், உங்களை அங்கிருந்து (போராட்டக் களத்திலிருந்து) அசைக்க முடியாது.

அவர்கள் (அரசாங்கம்) என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அவர்கள் தடுக்க நினைத்தாலோ, மிரட்ட நினைத்தாலோ, எதை வேண்டுமானாலும் செய்யலாம். நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. அவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். மோடி இந்தியாவின் கடந்தகாலம். அவரால் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. கடந்த காலத்தால் ஒரு போதும் எதிர்காலத்தை எதிர்த்துப் போராட முடியாது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com