பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா: மக்களவையில் பட்டாசாக வெடித்த பிரியங்கா காந்தி

போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்த யார் அதிகாரம் அளித்தது என்பதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும்.
Priyanka Gandhi
பிரியங்கா காந்தி
Published on

நீட் லீக் விவகாரத்தில் மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக போராட்டம் வெடிக்க தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

வினாத்தாள் லீக்கை தடுக்கும் வகையில் மத்திய அரசு பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026-ஐ மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. வினாத்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிக்கும் விதமாக சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மசோதாவின் அம்சங்கள்

முறைகேட்டின் தீவிரத்தை பொறுத்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும். திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை மற்றும ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். மேல் முறையீடு வழக்குகள் மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும். தவறு செய்யும் நிறுவனங்கள் பொதுத்தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடைக்காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளிட்ட மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி எம்.பி. பிரியங்கா காந்தி பேசியதாவது:-

* பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஷா ஆகியோரிடம் நான் கேட்க விரும்புகிறேன், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசவும், மாணவர்கள் மீது தடியடி நடத்தவும், பெல்லட் துப்பாக்கிகள், ஏகே-47 பயன்படுத்தவும் என்ன தேவை இருந்தது?

* பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் நான் கேட்க விரும்புகிறேன், மாணவர்கள் பயங்கரவாதிகளா?

இளைஞர்களைக் கண்டு ஏன் பயம்

* போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது பெல்லட் பயன்படுத்த யார் அதிகாரம் அளித்தது என்பதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும்.

* மாணவர்கள் போராட்டங்கள் மூலம் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினர்.

* நாட்டின் இளைஞர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள். மாணவர்களை அடக்குவதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?

* தேர்வு முறை தோல்வியடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன. ஆனால் ஒரு மாஃபியா கும்பல் கூட தண்டிக்கப்படவில்லை.

பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்

* 2024 வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதிலிருந்து, ஒரு தண்டனை கூட வழங்கப்படவில்லை

* விரைவு நீதிமன்றங்களின் செயல்பாடு மோசமாக உள்ளது. முதல் விசாரணையின்போது சிபிஐ வழக்கறிஞர் ஆஜராகவில்லை

* Gen Z தலைமுறையினரின் நம்பிக்கையை மீண்டும் பெற விரும்பினால், வெவ்வேறு கேமரா கோணங்களில் இருந்து வீடியோக்களை எடுப்பது பலனளிக்காது (மறைமுகமாக பிரதமரை சாடினார்).

* உங்கள் அரசின் கீழ் இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும்.

* மாணவர்களை வீதிகளிலிருந்து அகற்றலாம், ஆனால் அவர்களின் கேள்விகளை அகற்ற முடியாது.

இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com