

திருமண வயதை எட்டிய ஒருவர் சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமல்ல எனவும், அது அவர்களின் நன்னடத்தையை தீர்மானிக்காது எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு உறவு திருமணத்தில் முடியவில்லை என்பதற்காக மட்டுமே, ஒருவர் மற்றவரை ஏமாற்றிவிட்டார் என்று அர்த்தமில்லை எனவும் தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் கஜுலா திருபதி என்பவர் தற்காலிக காவலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், 2014-ஆம் ஆண்டில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் காரணமாக அந்த தேர்வு வாரியத்தால் ரத்து செய்யப்பட்டது.
பக்கத்து வீட்டு பெண்ணிடம் திருமண வாக்குறுதி அளித்து பாலியல் உறவில் ஈடுபட்டுவிட்டு, அதன்பின் திருமணத்திற்கு மறுத்ததாக அவர்மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தெலங்கானா மாநில காவலர் தேர்வு வாரியத்தால் அவரது காவலர் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
திருபதி தனது விண்ணப்பப் படிவத்திலேயே இந்த வழக்கை குறிப்பிட்டிருந்தபோதும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இருதரப்பினரும் பேசி அப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கண்டுள்ளனர். இதனையடுத்து தனது தகுதித்தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து தெலங்கானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கஜுலா திருபதி.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வாரியத்தின் தீர்ப்பை ரத்து செய்து, முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டார். மறுபரிசீலனையில், வாரியம் மீண்டும் தேர்வை ரத்து செய்தது. தனி நீதிபதி மீண்டும் அந்த ரத்து உத்தரவை ரத்து செய்து, நியமனம் செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது.
இதனை விசாரித்த இருநீதிபதிகள் அமர்வு, குற்றத்தை சமரசம் செய்து கொள்வது என்பது குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டதாக ஆகாது என்றும், ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட படைக்கு ஒருவர் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்க முதலாளியே சிறந்த நடுவர் என்றும் கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, திருபதி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, திருமணத்திற்கு முந்தைய உறவுகள் விஷயத்தில், அதிகாரிகள் காலத்திற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும், அத்தகைய உறவுகள் இன்று சாதாரணமாகக் பார்க்கப்படுகின்றன எனவும் தெரிவித்தது.
மேலும், “இந்த வழக்கில் இருமுறை தனிநீதி உத்தரவை ரத்து செய்யக்காரணம், அந்த உறவு முறையான சம்மதத்தின் அடிப்படையில் அமைந்தது என்ற அனுமானம்தான்” என்றும் அந்த அமர்வு தெரிவித்தது.
தொடர்ந்து, “பாதிக்கப்பட்ட பெண், தான் ஏமாற்றப்பட்டதாக கூறாதநிலையில், மேல்முறையீட்டாளரால் அவர் ஏமாற்றப்பட்டாரா என்பதைப் பொதுமக்களால் கூற முடியாது. அப்பெண்ணே சமரசம் செய்துகொள்ளத் தனது சம்மதத்தைத் தெரிவிக்கும்போது, இடையில் இருப்பவர்களாக யூகித்து மேல்முறையீட்டாளரின் குணநலன்கள் குறித்து ஒரு தவறான முடிவுக்கு வர எந்த முகாந்திரமும் இல்லை” எனவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து “பரஸ்பர சம்மதத்துடன் திருமண வயதை எட்டிய இருவர் உடலுறவு வைத்துக்கொள்வது, அந்த உறவில் இருக்கும் நபரின் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு தவறான அல்லது மோசமான முடிவுக்கு வருவதற்கு ஒரு காரணமாக அமைய முடியாது, அமையவும் கூடாது.
அந்த உறவு திருமணத்தில் முடியவில்லை என்பதற்காக மட்டுமே, ஒருவர் மற்றவரை ஏமாற்றிவிட்டார் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.” எனக் குறிப்பிட்டு வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.