

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்திலும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் 229 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 58 பேர் வாக்களித்து ஒரு மாநிலங்களவை எம்.பி.யை தேர்ந்தெடுக்க முடியும். பாஜக-வுக்கு 164 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். அவர்கள் 116 எம்.எல்.ஏ.-க்கள் மூலம் இரண்டு எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். அதன்படி தேசிய பொதுச் செயலாளர் தருண் சக் மற்றும் மாநில அமைப்பின் செயலாளர் ராஜ்னீஷ் அகர்வால் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்வு செய்யப்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது.
இரண்டு பேர்களை தவிர்த்து மகேஷ் கேவத் என்பவரை நிறுத்தியுள்ளனர். இவர் மத்திய பிரதேச மீனவர் நலத்துறை வாரியத்தின் தலைவராக உள்ளார். காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி.யான மீனாட்சி நடராஜனை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 64 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் எளிதாக காங்கிரஸ் எம்.பி. வெற்றி பெற்று விடலாம்.
ஆனால், பாஜக 3-வது வேட்பாளரை நிறுத்தியுள்ளதால், எம்.எல்.ஏ.-க்களை விலைபேசி கடத்திச் செல்ல வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் நினைக்கிறது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களை கர்நாடகாவுக்கு நகர்த்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதை காங்கிரஸ் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர்.
முன்னதாக, இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் மாற்றி வாக்களித்ததால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது மாற்றி வாக்களித்து விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.