

புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடக்க உள்ளது.
இந்த கண்ட அளவிலான போட்டி, 2026 ஜூன் 18 முதல் 24 வரையிலான தேதிகளில் நடத்தப்படுகிறது. ஃபோயில், ஈப்பி மற்றும் சேபர் ஆகிய ஆயுதப் பிரிவுகளின் கீழ் வாள் விச்சு போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்த போட்டியில் ஆசியா மற்றும் ஓசியானியா முழுவதிலும் உள்ள 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு விரர்கள் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு போட்டியில் மகளிர் பிரிவில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டியில் பாகிஸ்தான் தனது அணியை அனுப்பாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வாள்வீச்சு கூட்டமைப்பின் செயலாளர் உஸ்மான் அகமது கூறும்போது, “பாகிஸ்தான் வீரர்களின் விசாக்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.
நாங்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். உறுதிமொழிகளைப் பெறுவதற்காக நாங்கள் ஏற்பாட்டுக் குழுவையும் இந்திய வாள்வீச்சு சங்கத்தையும் இருமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் அதற்கான பதில் எங்களுக்கு கிடைக்கவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதட்டமான உறவுகளைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகளிடமிருந்து பாதுகாப்பு மற்றும் பிற உத்தரவாதங்கள் இல்லாமல் எந்தவொரு பங்கேற்பும் நடைபெற முடியாது என்பதால், பல்வேறு விளையாட்டுகளின் ஆசிய மற்றும் உலக அமைப்புகள்தான் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.