

குருகிராம்:
டெல்லியை ஒட்டியுள்ள தொழில் நகரமான குருகிராமில் (அரியானா மாநிலம்) உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் முஸ்லிம்கள், பல வருடங்களாக வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை பொதுவெளியில் நடத்தி வருகின்றனர். குருகிராமில் போதுமான மசூதிகள் இல்லாததால் அவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பொது இடங்களில் தொழுகை நடத்த மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிலையில், பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று பொது இடங்களில் தொழுகை நடத்த விடாமல் தடை ஏற்படுத்தினர். இதனால் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்ட 20 இடங்களில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் திரும்பப் பெற்றது.
இந்த விவகாரம் பற்றி அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கட்டார், பொது இடங்களில் தொழுகை நடத்துவது ஏற்புடையது அல்ல என்றார்.
‘தொழுகை போன்ற மதச்சடங்குகளை திறந்த வெளியில் நடத்தக் கூடாது. பொது இடங்களில் தொழுகை நடத்தும் இந்த நடைமுறை மற்ற மதங்களுடன் சச்சரவுகள் மற்றும் மோதல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் பொறுத்துக்கொள்ள முடியாது. இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க காவல்துறை மற்றும் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம். எந்த மோதலையும் அனுமதிக்க மாட்டோம். அதைத் தீர்க்க முயற்சி செய்கிறோம்’ என கட்டார் கூறினார்.
மனோகர் லால் கட்டார் இதுபோன்று பேசுவது இது முதல் முறை அல்ல. 2018ஆம் ஆண்டில், பொது இடங்களை விட மசூதிகள், ஈத்கா அல்லது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிற இடங்களில் தொழுகை நடத்த வேண்டும் என்று கூறினார்.
அரியானா முதல்வரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், இந்தக் கட்டுப்பாடு எல்லா மதத்தின் மீதும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார். ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் குறி வைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.