அடுத்து பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது - ராகுல் காந்தி

தர்மேந்திர பிரதான் ஒரு குறியீடு.
Rahul gandhi
Rahul gandhi
Published on

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதை வரவேற்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அடுத்து இந்த அரசை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவாக பேசி வெளியிட்டுள்ள ராகுல்,

முதல் வெற்றி

"முதலாவதாக, இது நமது மாணவர்களின் வெற்றி. இது இந்தியாவின் எதிர்காலம். நமது பெருமையாக இருந்த, உலகமே வியந்து பாராட்டிய நமது கல்வி முறை பல ஆண்டுகளாகத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தது. அது கைப்பற்றப்பட்டு, தனியார்மயமாக்கப்பட்டு வந்தது. அதற்கு எதிரான எதிர்வினை தான் இது.

தர்மேந்திர பிரதான் ஒரு குறியீடு. அவர் ஊழலின் குறியீடு, கல்வி முறையின் அழிவின் குறியீடு, திறமையின்மையின் குறியீடு.

கல்வி அமைப்பை மறுசீரமைப்பதை நோக்கிய ஒரு மிகப்பெரிய முதல் அடிதான் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா.

நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள்; உங்களை நினைத்து நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம்.

மாணவர்களின் அசைக்க முடியாத உறுதியான போராட்டமே நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாத்துள்ளது .

ராஜினாமா போதாது

கல்வி அமைச்சரின் ராஜினாமா மட்டுமே இறுதித் தீர்வாகாது. மேலும் இரு முக்கிய கோரிக்கைகள் மிச்சம் உள்ளன.

நாட்டின் எதிர்காலமாகத் திகழும் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த இளைஞர்களிடமும் பிரதமர் மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

டெல்லி மற்றும் பிற பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கொடூரமான வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நேரம் வந்துவிட்டது

இந்த நாடு இந்திய மக்களுக்குச் சொந்தமானது. இது இந்திய அரசியலமைப்புக்குச் சொந்தமானது. இந்த நிறுவனங்கள் எதுவும் உங்களுக்குச் சொந்தமானவை அல்ல.

நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களின் உரிமைகளுக்காக அரசியலமைப்பு வழியில் தொடர்ந்து போராட வேண்டும்.

பயப்படாதீர்கள். இந்தியாவைத் தாக்கி, நமது அரசியலமைப்பை அழித்து, நமது அனைத்து நிறுவனங்களையும் தாக்கும் இந்த அரசாங்கத்தை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது." என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com