

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மதிப்பெண்களில் குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ஆரியா சிங் என்ற மாணவி இந்த ஆண்டு நீட் மறுதேர்வு எழுதியிருந்தார்.
முடிவுகள் வெளியாவதற்கு முன்பு, தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் முதலில் வெளியான ஓஎம்ஆர் நகலில் கேள்விகளின் வரிசை மாறியிருந்தது. இது குறித்து ஆரியா சிங் எழுப்பிய புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய தேர்வு முகமை, ஓஎம்ஆர் நகலைத் திருத்தியது.
தேசிய தேர்வு முகமை வெளியிட்ட இறுதி விடைக்குறிப்பின்படி கணக்கிட்ட போது ஆரியா சிங்கிற்கு 609 மதிப்பெண்கள் வர வேண்டும்.
ஆனால், தேர்வு முடிவுகள் வெளியான இரவு, முதலில் அவரது மதிப்பெண் 540 எனக் காட்டியுள்ளது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மீண்டும் சோதித்த போது, அது 167 ஆக மாறியுள்ளது.
திருத்தத்திற்கு முன்பாக 3823333 ஆக இருந்த ஓஎம்ஆர் தாளின் வரிசை எண், திருத்தத்திற்குப் பிறகு 3824338 என மாறியுள்ளதாக அவர் வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் ஆரியா சிங்கிற்கு 167 மதிப்பெண்கள் மட்டுமே காட்டுவதால் மனமுடைந்த அவரும் அவரது குடும்பத்தினரும் பிரதமர் அலுவலகம், மத்திய கல்வி அமைச்சர் மற்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளனர்.
மாணவி ஆரியா சிங்கின் வீடியோ வாக்குமூலத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆம் ஆத்மி தனது எக்ஸ் பக்கத்தில், "தேசிய தேர்வு முகமை நாட்டின் 'தேசிய அதிர்ச்சி முகமை' ஆக மாறிவிட்டது. இந்த ஆவணங்கள் ஏதேனும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலியாக உருவாக்கப்பட்டவையா? நாடு இதற்குப் பதில் கேட்கிறது" என்று சாடியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், "கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே... நீட் மறுதேர்வு நடத்துவதற்காக நீங்கள் விமானப் படையை எல்லாம் பயன்படுத்தி ஏற்பாடு செய்த சிஸ்டம் இதுதானா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாணவர்களிடமிருந்தும் மதிப்பெண் குளறுபடிகள் குறித்த புகார்கள் வரும் நிலையில், தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை உயர்த்துவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட ஓஎம்ஆர் தாள்களைப் புகார்களாக சமர்ப்பித்து வருவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தங்களது சரிபார்ப்பு முறையில் இத்தகைய போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைபாயும் என்றும் எச்சரித்துள்ளது.