

2026-27ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் 'நட்புடன் உங்களோடு' திட்டத்தை பயன்படுத்த தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 21-ஆம் தேதியன்று நடைபெற்ற நீட் 2026 மறுதேர்வில், நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் அமைக்கப்பட்ட 5,440 தேர்வு மையங்களில் சுமார் 20 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர்.
இத்தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டது.
தேசியத் தேர்வுகள் முகமை நேற்று (வியாழக்கிழமை) நீட் இளநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் உள்ள இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் (AYUSH) மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கு 11.21 லட்சம் தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
பஞ்சாப்பை சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவை சேர்ந்த பன்சுல் பன்சால் ஆகியோர் 720-க்கு 715 மதிப்பெண்களை பெற்று கூட்டாக முதலிடத்தைப் பிடித்தனர்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனநல ஆலோசனைகளை பெற 14416 அல்லது 104 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2026-27 கல்வியாண்டின் நீட்தேர்வு முடிவுகள் நேற்று (16.07.2026) வெளியாகி உள்ளது.
மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனநல ஆலோசனைகள் பெறுவதற்கு தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இச்சேவை மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.