

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அமைத்துள்ள மாணவர் சட்ட உதவி நிதியத்திற்குத் தனது பங்களிப்பாக ரூ.1 கோடி வழங்குவதாக மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் அறிவித்துள்ளார்.
போராட்டங்களில் பங்கேற்று சட்டரீதியான வழக்குகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவ சிஜேபி, இந்த நிதியத்தை உருவாக்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இந்த நிதியத்திற்குப் பங்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிஜேபி தலைவர்கள் அசுதோஷ் ரான்கா, சௌரவ் தாஸ் மற்றும் வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் பங்கேற்றனர்.
அதில், பீகார், அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா என அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு உதவ உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் இணைந்து ஒரு சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும்.
எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் தங்கள் வழக்கு விவரங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில்புதிய போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது.
இலவசமாகச் சேவை செய்ய விரும்பும் வழக்கறிஞர்களும் இந்த இணையதளம் மூலம் இணையலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்படாமலும், காவல்துறை நடவடிக்கைகள் நிறுத்தப்படாமலும் இருந்தால் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவோம் என சிஜேபி எச்சரித்துள்ளது.
அரசு தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டதாகவும், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சௌரவ் தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேவேளையில், ஜூலை 26 மாலை 6 மணிக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பீகார் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி.) சார்பில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டம் நாடு முழுக்க பல மாநிலங்கள் வரை மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.
அந்த வரிசையில் பீகார் மாநிலத்திலும் மாணவர்கள், மாணவர் அமைப்புகள் சார்பில் போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மாநிலம் முழுக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, பலர் கைது செய்யப்பட்டனர்.