ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என எச்சரித்த டெல்லி பல்கலைக்கழகம் - பொங்கிய ராகுல்

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்
ராகுல்
ராகுல்
Published on

நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் சிஜேபி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியை போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தினர்.

கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். மேலும் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களையும் பயன்படுத்தியதற்கான ஆதாரமாக காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவ அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சுமார் 60 பேர் இதில் காயமடைந்தனர்.

இதனிடையே சோனம் வாங்சுக் தனது 26 உண்ணாவிரதத்தை நேற்று இரவு முடித்துக்கொண்டபோதும், முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும், சிறப்பு மசோதா நிறைவேற்றப்படும் என பிரதமர் மோடி வீடியோ மூலம் அறிவித்தும், தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகம் சுற்றறிக்கை

இந்த சூழலில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு டெல்லி பல்கலைக்கழகம் தனது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், "உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி ஜந்தர் மந்தர் போராட்டங்களில் பங்கேற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி சட்டவிரோதக் கூட்டங்களில் பங்கேற்கும் மாணவர்கள் மீது நேரடியாக சட்ட நடவடிக்கை பாயும்.

அப்படி நடந்தால் மாணவர்களின் கல்வி, மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு பாதிக்கப்படும்" என நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மேலும், "மாணவர்களை உணர்ச்சிவசப்படுத்தவும் பதற்றத்தை அதிகரிக்கவும் இணையத்தில் போலியான வீடியோக்களும் செய்திகளும் பரப்பப்படுகின்றன. அவற்றை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயக ரீதியில் போராடும் மாணவர்களின் குரலை ஒடுக்க நினைப்பதாக டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்தச் சுற்றறிக்கைக்கு மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ராகுல் காந்தி ஆவேசம்

டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்தச் சுற்றறிக்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், "தங்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும் மாணவர்களை அச்சுறுத்தவும் மிரட்டவும் உங்களுக்கு எவ்வளவு தைரியம்?

காலம் வரும்போது இதற்கெல்லாம் நீங்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!" என்று சாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com