உயர்கல்வித் துறை செயலாளர் மாற்றம்.. மாணவர்கள் போராட்டத்தால் மத்திய அரசு நடவடிக்கை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
Centre shifts Higher Education Secretary amid student protests
Published on

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்படி, மாணவர்கள் போராடி வரும் சூழலில், உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷியை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

தேசிய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததையடுத்து பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நீட் வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும் சிபிஎஸ்இ நடத்திய பொதுத் தேர்வு மதிப்பீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்தும் தேசிய தேர்வு முகமையின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷியை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜோஷி இதற்கு முன்னர் தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநராகவும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

புதிய அதிகாரிகள் நியமனம்:

இவர் 2023-ல் மணிப்பூரில் இன மோதல் மோசமடைந்ததை தொடர்ந்து, தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தற்காலிகத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இதையடுத்து பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய இரு துறைகளின் உயர் பதவிகளுக்கும் புதிய அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.

நரேஷ் குமார் கங்வார் என்பவர் தற்போது உயர்கல்விச் செயலாளராகவும், டி.கே.அனில் குமார் என்பவர் பள்ளிக்கல்விச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நரேஷ் கங்வார் முன்னதாக கால்நடை வளர்ப்பு அமைச்சகத்தில் செயலாளராகவும், அனில் குமார் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றி வந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com